Breaking News

கேப்பாபிலவு துப்பாக்கி சூடு : பக்கசார்பற்ற விசாரணை அவசியம்



கேப்பாபிலவு துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோப்பாபிலவில் வசித்துவரும் வி தியீபன் என்பவரது வீட்டிற்குள் கடந்த 28 ஆம் திகதி சிவில் உடையில் வந்த இருவர் தம்மை பொலிஸார் என அடையாளப்படுத்தி கொண்டு உள்நுழைந்துள்ளனர்.

தம்மிடம் குறித்த இளைஞரை கைதுசெய்வதற்கான நீதிமன்ற பிடியாணை இருப்பதாக தெரிவித்த போது அதனை காண்பிக்குமாறு தீயீபன் கோரியதாக சிவசக்தி ஆனந்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் நீதிமன்ற பிடியாணை உத்தரவை காண்பிக்க மறுத்த அவர்கள், குறித்த இளைஞரை கைதுசெய்வதற்கு முயற்சித்துள்ளனர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



குறித்த இளைஞருக்கு காயம் எதுவும் ஏற்படாத போதிலும் இந்த சம்பவத்திற்கு வன்னி மாவட்ட மக்கள் சார்பில் தமது கண்டனத்தை தெரிவிப்பதாக சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்.