Breaking News

பஷில் கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை.!



பாரிய நிதி மோசடி ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு மாத்தறை மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

50 ஆயிரம் ரொக்கப் பிணையிலும் 16 இலட்ச மூன்று சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு வெளிநாட்டிற்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனது கடவுச் சீட்டை நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையும் காலை 9 மணி முதல் 12 மணிக்கு இடையில் நிதி குற்றப் பிரிவுக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை பகுதியிலுள்ள காணி விவகாரம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காணி விவகாரம் ; பஷில் ராஜபக்ச கைது

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான பஷில் ராஜபக்ச கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று வியாழக்கிழமை பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவிற்கு சாட்சியமளிக்க சென்ற அவர் விசாரணையின் பின்னர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை பகுதியிலுள்ள காணி விவகாரம் ஒன்று தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், இவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்தபோது பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்த பஷில் ராஜபக்ச அனைத்து அமைச்சுக்களின் நிதி விவகாரங்களையும் கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரங்களையும் பெற்றிருந்தார்.

பஷில் ராஜபக்ச மீது பல்வேறு நிதி மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு மாத்தறை காணி விவகாரம் தொடர்பில் கைதுசெய்துள்ளது.

ஆனால் பஷில் ராஜபக்ச மீது இன்னும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருப்பதாகவும் அது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

மகிந்த ராஜபக்சவின் மகனான யோசித்த ராஜபக்ச தொலைக்காட்சி நிறுவன நிதி விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மற்றுமொரு மகனான நாமல் ராஜபக்ச விரைவில் கைதுசெய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மகிந்த ராஜபக்சவின் மூத்த சகோரதரரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்சவும் கைதுசெய்யப்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் பஷில் ராஜபக்ச கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.