முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதற்கு காணிப்பிரச்சனையே தடை!
இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. அவர்களின் நினைவாக நினைவுத் தூபி ஒன்று அமைப்பதற்கு காணி உரித்துப் பிரச்சனையாகவுள்ளதாகவும், வடமாகாணத்தின் அனுசரணையுடன் பணத்திற்கேனும் காணியை வாங்கி நினைவுத்தூபி அமைக்கப்படும் என மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை யாழ். ஊடக அமையத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுநாள் தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
தமிழர் தாயகத்தில் உள்ள காணிகளின் உரிமைகள் அங்குள்ளவர்களிடமே இல்லாதநிலை காணப்படுவதாகவும், இதன்காரணமாகவே நினைவுத்தூபி அமைப்பதில் சிக்கல் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்ததுடன் அடுத்த வருடத்திலாவது சொந்த மண்ணில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவதற்காக எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.








