Breaking News

என்ர ஒரு கை எங்கயம்மா? – ஜெரா

என்ர ஒரு கை எங்கயம்மா ?

ஆயிசா வீட்டு படலையை தாண்டுகையில், “காயப்பட்ட வேறயும் யாரும் பிள்ளையள் இங்கால இருக்கினமோ” என்றேன்.

“ஓம். இந்த சந்தியால திரும்பினவுடன் முதலாவதா வாற மண் வீட்டில ஒரு பிள்ளை இருக்கிறா. கஸ்ரப்பட்ட பிள்ளை..“ அவாவும் பாவம்..” என்றாள் ஆயிசா.

ஆயிசா சொன்ன மண்வீட்டின் முற்றத்தில் சிறுமிகள் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட 80 வயதைத் தாண்டிய அம்மா ஒருவர் எட்டிப்பார்க்கிறார். அவரிடம் தான் போகிறேன் என்பதையறிந்து, என்னிடம் வருகிறார். அறிமுகம் பெறுகிறார்.

“இண்டையோட 7 வயசு முடியுது. நாளைக்கு 8 வயசு. ஆள் பள்ளிக்கூடத்தால வந்ததில இருந்து ஒரே கோவம். வகுப்பு பிள்ளையளுக்கு நாளைக்கு குடுக்க கண்டோசுப் பெட்டி வேணும் எண்டாள். நானும் ஒரு பெட்டி வாங்கிக் குடுத்திட்டன். இன்னொரு பெட்டி வாங்கித்தரட்டாம் எண்டு அடம்பிடிக்கிறாள். இன்னொரு பெட்டி வாங்கிக்குடுக்க காசுக்கு நான் எங்க போறது மேனே. பக்கத்துக் கடையில இருந்தால் கடனுக்காவது வாங்கிக் குடுக்கலாம். அதிலயும் இல்லயாம்..!”

சைந்தவியை அவளின் அப்பம்மா இப்படித்தான் அறிமுகப்படுத்துகின்றார்.

ஷெல் துண்டென்று அறுத்துப் போன கையுடன் எனக்கு முன் சின்னக் கதிரையில் அவள் அமர்ந்திருக்கிறாள். முகம் முழுவதும் பிடிவாதம். யாரையும் பார்க்க விரும்பவில்லை. நாளைக்கு பள்ளிக்கூடத்தில் அவளின் வகுப்புத் தோழிகளுக்கு கொடுப்பதற்கு அம்மம்மா என்ன செய்தாவது இன்னொரு கெண்டேஸ் பெட்டி வாங்கித்தரவேண்டும் என்பதில் சற்றும் விட்டுக்கொடுக்காதவளாக அவ்விடத்தில் இருக்கிறாள்.

உங்கட பேர் என்ன?

“…………ம்..சொல்லமாட்டன்..”

சற்று நேரமெடுக்கிறாள். “சைந்தவி”

எத்தினையாம் வகுப்பு படிக்கிறீங்கள்?

“8 ஆம் ஆண்டு”

என்ன பாடம் படிக்க பிடிக்கும்?

“கணிதம்”

படிச்சி என்னவா வருவிங்கள்?

“பிரதீபா ரீச்சர போலவும், மஞ்சுளா ரீச்சர் போலவும்”

யார் பிரதீபா, மஞ்சுளா ரீச்சர்?

“அவைய எனக்குப் பிடிக்கும்.” சைந்தவியின் கண்கள் சற்றுப் பிரகாசிக்கின்றன. பிடிவாதத்தின் வெளிப்பாடான கோபம் என்னிடத்தில் தணிகிறது. 7 வயதில் அவள் இந்த உலகத்தில் இருந்து பெற்ற அனுபவம் மிகவும் குறும்புத்தனமிக்கது. குதூகலமானது. அவளுக்கு வறுமை பற்றி எதுவும் தெரியாது. பணம் பற்றி எதுவும் தெரியாது. அப்பம்மாவின் கஸ்ரங்கள் அறியாதவள். அவளைப் பொருத்தவரையில் இருள்வதும், விடிவதும்தான் வாழ்க்கை. அதற்குள் ஆயிரம் தடவைகள் அவளின் உலகமான அப்பம்மாவை கடிந்துகொள்கிறாள். தனக்குத் தெரிந்த மொழியில் கோபப்படுகிறாள். மறுகணமே அப்பம்மாவை கட்டியணைத்துக்கொள்கிறாள். அவளின் உலகம் எண்பது வயதைக் கடக்கும் அந்த அப்பம்மாதான்.

நீங்க அப்பம்மாவோட கோவம்தானே. அப்ப அப்பம்மாவ நான் கூட்டிக்கொண்டு போகவோ?


“வேணாம்..” ஓடிச்சென்று முழங்கையோடு ஷெல் அறுத்த கையை, அப்பம்மாவின் மடியில் குத்தி வைத்து நின்றுகொள்கிறாள். அப்பம்மாவுடனான அவளின் கோவம் இவ்வளவும்தான். அப்பம்மாவும், கீரைப்பிடி கொண்டைக்குள் அகப்பட்டுள்ள அவளின் தலையை வருடிக்கொடுக்கிறார்.

“நான் இவளுக்கு அப்பம்மாதான். ஆனா இவள் அப்பம்மா எண்டு என்னய கூப்பிடுறதில்ல. அம்மா எண்டுதான் கூப்பிடுவா. உன்ர அம்மா ஷெல் அடியில், முள்ளிவாய்க்காலில செத்திட்டா. நான் உனக்கு அப்பம்மாதான் எண்டு சொன்னால் இவளுக்கு கோவம் வரும். அப்பம்மா இல்ல. அம்மா எண்டுவாள்.

“..இவள் பிறந்து 11 மாசமா இருக்கேக்க முள்ளிவாய்க்காலுக்குப் போயிற்றம். அண்டைக்கு அஞ்சாம் மாசம் 15 ஆம் தியதி. நான் சாப்பாடு குடுக்கினம் எண்டு வரிசையில் நிற்கப் போயிற்றன். நான் சாப்பாட்டு வரிசையில கனநேரம் நிண்டன். என்னைக் காணேல்ல எண்டு, சைந்தவின்ர அப்பா என்னைய தேடி வெளிக்கிட்டிட்டார். மருமகள் இவளையும் வச்சிக்கொண்டு தறப்பாளுக்குள்ள இருந்திருக்கிறா. அந்த நேரம் ஷெல்லடி தொடங்கீற்று..”

“..பிள்ளை இவளயும் தூக்கிக்கொண்டு பங்கருக்குள்ள ஓடிருக்கு. பங்கர்லயே ஷெல் விழுந்திற்று. அந்த பங்கருக்குள்ள 16 பேர் இருந்திருக்கினம். மருமகள் உட்பட அந்த 16 பேருமே பங்கருக்குள்ள செத்திட்டினம்..”

“..விசயம் அறிஞ்சி, நானும் மகனும் ஓடிவந்து பாக்கிறம், பிணக்குவியலுக்குள்ள இந்த 11 மாசக் குழந்த ரத்தத்தில தவளுது. ஓடிப்போய் மகன் தூக்கினான். சைந்தவிக்கு ஒரு கைய காணேல்ல. பிஞ்சு ரத்தம் கொப்பளிச்சுக்கொண்டிருக்கு. அந்த ஷெல்லடியில இவள் மட்டும்தான் தப்பினது. அதுக்குள்ள இருந்த எல்லாருமே செத்திட்டினம்..”

“..பிறகு ஆஸ்பத்திக்கு கொண்டுபோய், மருந்து கட்டினம். அப்பிடியே இவளயும் தூக்கிக்கொண்டு ஆமியிட்ட வந்திட்டம். என்னைய பிள்ளையோட ஆஸ்பத்திரிக்கு அனுப்பீற்றாங்கள். அதோட மகன பிரிஞ்சிற்றன். எல்லாரிட்டயும் விசாரிச்சும் மகன் பற்றி எந்த தகவலும் இல்ல. பிறகு ஆனந்தகுமராசாமி காம்ப்ல கொண்டு போய்விட்டாங்கள். இவளயும் வச்சிக்கொண்டிருந்தன். யாரோ சொல்லி மகன் காம்புக்கு வெளியில இருக்கிறதா அறிஞ்சன். அவனத் தேடி போனா அவன், ஊருக்கு வந்திற்றான். பிறகு நானும், பிள்ளையோட ஊருக்கு வந்திற்றன்.

இவள் விவரம் தெரியத் தொடங்கேக்கயே கை பற்றி எதுவும் தெரியாமல்தான் இருந்தவள். பிறகு பள்ளிக்கூடம் போகத் தொடங்கின பிறகுதான், என்ர ஒரு கை எங்கயம்மா எண்டு கேட்டவள். பள்ளக்கூடத்தில பிள்ளையள் கேட்டிருப்பினமாக்கும்…!”

மிகுந்த கனதியான சொற்களை அப்பம்மா தொடர்ச்சியா உதிர்ந்துகொண்டிருந்தார். அப்பம்மாவின் மடியில் ஊன்றிய கையை எடுக்காமல், அவர் சொல்வதையெல்லாம் ஆழமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள் சைந்தவி. அவளின் பார்வை மட்டும், அந்த வீட்டுக்கு வெளியான, பரந்த வெளியில் அலைந்துகொண்டிருந்தது.

“..முள்ளிவாய்க்காலில இருந்து வரேக்க இவளின்ர எந்த டொக்கிமன்ட்ஷும் இருக்கேல்ல. எல்லாமே எரிஞ்சிற்று. பிறகு ஒவ்வொண்டையும் எடுக்க நான் பட்டபாடு…!ஒரு மாதிரி எல்லாம் எடுத்து பிள்ளைய 3 ஆம் ஆண்டு மட்டும் படிப்பிச்சிற்றன்..”அந்த முதுமைக்குள் அடங்கியிருக்கும் வைராக்கியம், இவ்விடத்தில் வரவேண்டிய பெருமூச்சை தடுத்திருக்கவேண்டும். அதுவரை அப்பம்மாவின் மடியில் படுத்திருந்த சைந்தவி, எழுந்து வீட்டுக்கு வெளியே சென்றாள். அப்பம்மாவால் எவ்வளவு பேசமுடியும் என்பதைக்கூட சைந்தவி நன்றாகவே படித்து வைத்திருக்கிறாள்.

- நன்றி துளியம்