இந்த வாழ்க்கை நரகமா இருக்கு.. – ஜெரா
போர் – சிறுவர்களுக்கு அடுத்ததாக அதிக பாதிப்பை பெண்களுக்குத்தான் ஏற்படுத்துகின்றது. 30 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து, மௌனித்த ஈழப்போரிலும் அதனை சரியாகப் பிரதியிட்டுப் பார்க்கலாம்.
ஈழப்போரில் அதிகம் பாதிக்கப்பட்ட தரப்பினருள் சிறுவர்களுக்கு அடுத்த நிலையில் பெண்கள் இருக்கின்றனர். அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களிலும் போரில் ஈடுபட்ட தரப்பினராகிய முன்னாள் பெண் போராளிகள் கடந்து வந்த பயணம் வலி மிகுந்தது. முன்னாள் பெண் போராளிகளிலும், திருமணமாகி கணவன் போரில் கொல்லப்பட்டோ – சரணடைவுக்குப் பின் கொல்லப்பட்டோ விதவையான பெண்கள் எதிர்கொள்ளும் துயரம்…………!
வேகமாக கட்டடமயப்பட்டுவிட்ட கிளிநொச்சி நகரின் டிப்போ சந்தியிலிருந்து, உருத்திரபுரம் செல்லும் வீதியில், இடையில் இருக்கிறது செல்வாநகர் கிராமம். அந்தக் கிராமத்தில் மாற்றுவலுவுடையவர்களுக்கென உருவாக்கப்பட்ட குடியிருப்பில்தான், நாகராசா நாகசோதி அக்கா வசிக்கிறார்.
மழை வெள்ளத்தினால் புதையும் சகதிக்குள் இருக்கிறது அவரின் வீடு. போருக்கு முன்னரும், போருக்குப் பின்னரும் நட்ட மரங்கள் இந்த மழைக்கு செழித்திருக்கின்றன. போருக்கு முன்னர் அந்த வீடு கட்டப்பட்டிருக்க வேண்டும். போருக்குப் பின்னர் இப்போது மீளவும் புனர்நிர்மாணம் செய்திருக்கின்றனர். அந்த வீட்டின் வாசல் மழையின் தூவானம் வீசும் திசையில் வைக்கப்பட்டிருக்கிறது. எனவே மழைவெள்ளம் வீட்டுக்குள்ளேயும் தேங்குகின்றது.
ஒற்றைக்கால் அவருக்கு தட்டையானது. சாய்ந்து சாய்ந்தே நடக்கிறார். கைகள் இரண்டிலும் காயங்கள் இருக்கின்றன. அதனால் அக் கைகளில் சாதாரணமான உயிர் இல்லை. மரத்ததுபோல இருக்கின்றன. அவரால் பாரமான எப்பொருளையும் தூக்க முடியாது என்பதைப் பார்த்தே புரிந்துகொள்ளலாம்.
இந்த அறிமுகத்தைப் பெறுபவர்தான் நாகராசா நாகசோதி அக்கா.
“..அப்பா, அம்மா யாருமில்ல. 1989 ஆம் ஆண்டு மட்டக்களப்பில இருந்து நடந்து வந்து இயக்கத்தில சேர்ந்தனான். பொலிகண்டி ட்ரெயினிங் பேஸ்ல இருந்து வெளியேறின முதல் பட்ச் நாங்கள்..“
“..1991 ஆம் ஆண்டு சூரியக்கதிரி நடவடிக்கையில முதல் முறை காயப்பட்டனான். பாதி தலை மூளையோட சிதஞ்சிற்று. மூளைய சொப்பின் பையில கட்டித்தான் மெடிசின்காரர் கொண்டு வந்தவ. நான் செத்திற்றன் எண்டு முடிவெடுத்திற்றினம். பிறகு மெடிசின்ல தான் உயிர் இருக்கு எண்டு கண்டுபிடிச்சவ..“
“..அதுக்குப் பிறகு அடிக்கடி வலிப்பு வரும். குளிசையள் பாவிச்சிக்கொண்டு இருந்தன். 2000 இல் இவர கலியாணம் செய்தன். 2002 இல் முதல் பிள்ளை பிறந்தது. ஆம்பிளப் பிள்ள. பிறந்த உடனயே செத்திற்று. பிறகு ஒரு பொம்புளப் பிள்ளையும் செத்துத்தான் பிறந்தது. இது ஏன் எண்டு செக் பண்ணி பார்க்கேக்கத்தான், வலிப்புக்கு பாவிச்ச குளிசையாளதான் இப்பிடி பிள்ளையள் செத்தது எண்டு தெரியவந்தது. பிறகு குளிசைய நிப்பாட்டிட்டன். 2006 இவா பிறந்தா. இந்த வருசம் ஷ்கொலர்ஷிப் எடுக்கிறா..“ நவஜோதி அக்காவின் கடந்த காலமும் துயரங்களால் நிரம்பியதுதான் என்பதை முதல் பகுதி உரையாடல் தெளிவாகவே சொன்னது. அவரால் தொடர்ந்து பேசுவதற்கு இயலாமல் இருந்தது. சொற்களுக்கிடையில் அதிகம் சுவாசித்தார். மூச்சுவாங்கினார். மீளவும் தொடர்ந்தார்.
“..2009ஆம் ஆண்டு 4 ஆம் மாசம். அப்ப நாங்கள் மாத்தளன்லதான் இருந்தம். அப்ப எனக்கு கை ஏலும். எதுக்கோ தண்ணி ஊத்திக்கொண்டிருந்தன். திடீர் எண்டு எங்கயோ இருந்து வந்த ரவுண்ஷ் என்ர கையில புடிச்சிற்று. அவர் வந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனார். அது ஆஸ்பத்திரியில்ல. காயப்பட்ட சனமெல்லாம் குடும்பம் குடும்பமா தங்கியிருந்த இடம். நாங்களும் அண்டைக்கு இரவு அங்கதான் இருந்தம். பிள்ளைய நடுவில கிடத்திப்போற்று, நான் இங்காலயும், அவர் அங்காலயுமா படுத்திருந்தம். சாமம் இருக்கும். அந்தக் கொட்டிலுக்கு மேல ஆர்.பீ.ஜீ. , ஷெல் அடிச்சி விட்டிற்றாங்கள். மேல இருந்து ஷெல் பீசுகள் கொட்டுது. ரெண்டு பேரும் பிள்ளைக்கு மறைச்சிற்றம். அவரின்ர ஒரு பக்க தோள் மூட்டோட கை சிதம்பிப் போச்சு. எனக்கும் காயம். பிள்ளைக்கு ஒரு காயமும் இல்ல. பிறகு அண்டைக்கு இரவு ஆமி எங்கள சுத்திவளைச்சிப் பிடிச்சிற்றுது..”
“..அதுக்குப் பிறகு ,வவுனியா ஆஸ்பத்திரியில 3 மாசம் இருந்தம். அவரும் எழும்பமாட்டார். நானும் எழும்பமாட்டன். அவ்வளவுக்கு காயம். 3 வயசு இவாவுக்கு. அந்த வயசிலயே எங்கள கவனிச்சிக்கொண்டது இவாதான். ஒருநாள், காலம ஆஸ்பத்திரியில சாப்பாடு எடுக்க போனவ. முதல் போய் ஒரு ப்ளேட் எடுத்து வந்து வச்சிற்று, ரெண்டாந்தரம் போய் சாப்பாடு கேக்கேக்க, சாப்பாடு குடுத்த நேர்ஸ் ஒரு ஆளுக்கு ஒருக்கா தான் குடுக்கிறது எண்டு சொல்லியிருக்கிறா. எனக்கு வாங்கீற்றன். அப்பா, அம்மாக்கு தாங்கோ எண்டு கேட்டிருக்கிறா. அதைக் கேட்டிற்று, நேர்ஸ் எங்க அப்பா, அம்மா காட்டு எண்டு சொல்ல, எங்களிட்ட கூட்டி வந்தா. எங்கள பார்த்தவுடன அந்த நேர்ஸ் அழுதிற்றா..“
3 மாசம் முடிய ஆனந்தகுமாரசாமி முகாமில கொண்டு போய் விட்டுச்சினம். அங்க வாழ்க்க புதுசா இருந்ததிச்சு. சில நாள்தான் இருந்தம். ஒருநாள், வாகனத்த கொண்டு வந்து நிப்பாட்டிற்று, என்னையும், அவரையும் இயக்கப் பேர் சொல்லி கூப்பிட்டிச்சினம். பிள்ளையோட வாங்கோ, புனர்வாழ்வு முடிய கொண்டு வந்து விடுறம் எண்டுச்சினம். அவர் பிள்ளைய தூக்கிக்கொண்டார். குடும்பமா தடுப்புக்குப் போனம். என்னையவும், பிள்ளையவும் பம்பமடுவில இறக்கிவிட்டுச்சினம். முழங்கைய மடிச்சி பிள்ளைய வாங்கினன். அப்பிடியே ஆமிக்காரியள் எங்கள உள்ளுக்கு கூட்டிக்கொண்டு போறாளுகள். நான் மறையப்போற இடத்தில இருந்து திரும்பி பார்த்தன். அவர் எங்கள பார்ப்பார் எண்டுதான் திரும்பினன். ஆனா அவர் பாக்கவேயில்ல. பஸ் சீற்ல அப்படியே படுத்திற்றார்.
அப்பவே எல்லாம் அவருக்கு விளங்கீற்று போல…” மழை சோவெனக் கொட்டியது. நாகசோதி அக்கா அழுத கண்ணீர் மழையை விட அதிகமாயிருந்தது. நீண்ட நேரம் விம்மியழுதார். அழுகைநை நிறுத்திக்கொள்ளமுடியவில்லை. அழுதபடியே கதைத்தார்.
“..2009 ஆம் ஆண்டு 12 ஆம் மாசம் 19 ஆம் திகதி எண்டு நினைக்கிறன். அவர கூட்டிக்கொண்டு வந்தவ. என்னோட கதைக்க விட்டவ. அவர் நிறைய வேதனைப்பட்டார். நீ இனி தனிய. பிள்ளைய எப்பிடி பார்க்கபோறியோ தெரியேல்ல, எண்டு திருப்பி திருப்பி சொல்லிக்கொண்டிருந்தார். எனக்கு அவர் ஏன் அப்பிடி சொல்றார் எண்டு விளங்கவும் இல்ல..”
“..சந்திப்பு முடிய அவர கூட்டிக்கொண்டு போயிற்றினம். அண்டையில இருந்து மூண்டு, நாளுநாள் கழிய, உங்கட அவரின்ர பொடி வவுனியா ஆஸ்பத்திரியில இருக்கு பாருங்கோ எண்டு என்னட்ட வந்து சொல்லுகினம். இதய வருத்தத்தில செத்ததா சொல்லுச்சினம்..”
“..அவருக்கு அப்பிடி ஒரு வருத்தம் இதுக்கு முதல் இருக்கேல்ல. அவரின்ர சாவில கூட சந்தேகம் இருக்கு. அவரோட தடுப்பில இருந்த ஆக்களிட்ட விசாரிச்சனான். ஒருநாள் இரவு போல அவர விசாரிக்க எண்டு கூட்டிக்கொண்டு போனவையாம். விசாரண முடிய கைத்தாங்கலா ரெண்டு பேர் தூக்கிக்கொண்டு வந்து அவர் இருந்த அறைக்குள்ள போட்டிற்று போனவையாம். அதுக்குப் பிறகு அவர் எழும்பவே இல்லயாம்.. எண்டு சொல்லிச்சினம்..” அதற்குப் பின்னரான வாழ்க்கை நாகசோதி அக்காவுக்கு இன்னும் நரகமாக இருந்தது. வறுமை, வெறுமை, தனிமை எல்லாமே தொடர்ச்சியாக அவரைத் தாக்கிக்கொண்டிருக்கின்றன.
“..இங்கு வந்த பிறகு என்னால நிம்மதியா குளிக்கக்கூட முடியேல்ல. எப்பிடித்தான் வேலி அடைச்சாலும், கிணத்தடியில சத்தம் கேட்டாலே காணும் பக்கத்து வீட்டுக்காரன், எட்டிப்பார்ப்பான். அவன்ர வீட்டில மனுசியோட என்ன பிரச்சினை எண்டாலும், என்ர வீட்டப் பார்த்துத்தான், மனுசர் அறியாத தூசணத்தாலயெல்லாம் பேசுவான்..”
“..இப்பத்த நிலமையில தனிய இரவில இருக்கிறதே எவ்வள பயம்..? முந்தியெண்டால் சொந்தக் கால் இருந்தது. இப்ப அதுவும் இல்ல. ஒற்றைக்கால் தூங்கிக்கொண்டுதான் இருக்கும். வேகமா எழும்பினாலே தடக்குப்பட்டு விழுந்திடுவன்..”
“..இந்த வாழ்க்கை நரகமா இருக்கு. நாங்கள் ஒரு சத்திய வாழ்க்க வாழ்ந்தனாங்கள். இந்த சனங்களுக்கான தியாகங்கள்தான் எங்கட வாழ்க்கைய இருந்தது..ஆனா இப்ப..?” போர் முடிந்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. போரில் அதிகம் பாதிக்கப்பட்ட தரப்பினரின் சாட்சியாளர்களில் ஒருவராகவே நாகசோதி அக்கா இருக்கிறார். இந்த உரையாடலில் அவர் பயன்படுத்திய இறுதி வசனங்கள், ஒட்டுமொத்த தமிழர்களினதும், ஓடுக்குமுறையாளர்களினதும் மனங்களையும் கேள்விக்குட்படுத்தியிருக்கிறது. இந்நாட்களில் மட்டும் பேசிவிட்டு, முள்ளிவாய்க்காலை மறப்பதன் மாயாஜால மனோதத்துவத்தை உடைத்துப்போட்டிருக்கிறது.
–நன்றி துளியம்








