மகிந்த ஆட்சியின் பிரமுகர்களுக்கு எதிரான விசாரணைகளுக்கு 'இடையூறு'
இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஊழல் விசாரணைகளுக்கு தற்போதைய அரசாங்கத்தில் இடையூறுகள் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாக அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
முந்தைய ஆட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவருக்கு எதிரான ஊழல் விசாரணையில் பிரதான சாட்சியாளராக உள்ள வாகன ஓட்டுனர் ஒருவரை, சாட்சியாளராக செயற்பட வேண்டாம் என்றுகூறி காவல்துறையினர் தாக்கியுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கடந்த திங்களன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அமைச்சரின் இந்தக் கருத்துவந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு முந்தைய நாள், ஆயிரத்து 260 கோடி ரூபா பணத்தை அரச வங்கி ஒன்றிலிருந்து மீளப்பெறுவதற்கு குறித்த சாட்சியாளர் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் ராஜித சேனாரத்ன கூறினார்.
இந்த நிதி மோசடியை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளதுடன், பணம் எவ்வாறு எடுக்கப்பட்டது, எங்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது என்பது தொடர்பிலும் அவர் கூறியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதனிடையே, கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, எதிரணி பிரமுகர்களை கொலை செய்வதற்கு திட்டங்கள் தீட்டப்பட்டிருந்ததாக குறித்த சாட்சியாளர் மூலம் தெரியவந்திருப்பதாகவும் செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்தார்.
சென்னையிலிருந்து தாக்குதலாளிகளை வரவழைத்து கொலை செய்துவிட்டு, அவர்களை தப்பிச் செல்லவைக்கும் திட்டம் ஒன்று இருந்ததாகவும் சாட்சியாளரான அந்த வாகன ஓட்டுநர் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்.








