பிரிவினையை அல்ல அதிகார பகிர்வையே கோருகின்றோம்: சி.வி.கே
வட மாகாண சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு தொடர்பிலான முன்மொழி வினூடாக நாட்டின் பிரிவினையை கோரவில்லை எனவும், அதிகார பகிர்வினையே கோருவதாகவும் வட மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறி சபாரத்தினத்தின் 30வது நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘வட மாகாண முதலமைச்சர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரை இலக்குவைத்து தாக்குகின்ற கைங்கரியம் நடைபெற்று வருகின்றன. இதையும் கேட்காவிட்டால் நாங்கள் எதை கேட்பது என்பது ஒரு கேள்வியாக எங்கள் மக்களின் மனங்களில் இருக்கின்றன. இது அடிப்படை உரிமை.
நான் ஒரு தீவிர தமீழீழ விடுதலைப்புலிகள் ஆதரவாளன். அதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. அவர்களின் அங்கீகாரம் எனக்கு இருந்தது. விடுதலைப்புலிகளாக இருந்தாலும் சரி ரெலோவாக இருந்தாலும் சரி எங்களின் இலக்கு ஒன்றாகவே இருந்தது. நாங்கள் ஒன்றித்து பயணிப்பதில் எந்த தடையும் இருக்காது என நினைக்கின்றேன்.
இப்போதும் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பிலே இருக்க கூடிய அத்தனை கட்சிகளினுடைய இலக்கும், நோக்கமும் ஒன்றாக இருக்கின்ற காரணத்தினால் எங்களுக்குள்ளேயே நாங்கள் எங்களை விமர்சிப்பதை தவிர்த்து அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்’ எனவும் தெரிவித்துள்ளார்.








