Breaking News

சட்டவிரோத மணல் அகழ்வு விசாரணைக்கு சென்ற பொலிஸை மோதிய உழவு இயந்திரம்


சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரம் மோதியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்துள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயரச் சம்பவம் இன்று (28) காலை 8.25 மணியளவில் யாழ். தென்மராட்சி கெற்பேலி வீரபத்திரர் கோவிலடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சட்டவிரோத மணல் அகழ்வு நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர். அப்போது மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை அவர்கள் வழிமறித்துள்ளனர்.

ஆனால், உழவு இயந்திரத்தை இயக்கியவர் அதை நிறுத்தாமல் நேரடியாக பொலிஸ் உத்தியோகத்தர்களை மோதியதோடு, சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மோதலில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், மற்றொருவர் கடுமையாகக் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.

சம்பவத்துக்குப் பின்னர் கிளாலி பகுதியில் வைத்து குறித்த உழவு இயந்திரத்தை பொலிஸார் கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர், ஒரு பிள்ளையின் தந்தையான 50 வயதுடைய ஹெட்டியாராட்சிக்கே அல்பேட் என்ற பொலிஸ் உத்தியோகத்தர் என உறுதி செய்யப்பட்டுள்ளது.