Breaking News

தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகள் வெற்றி; புலம்பெயர் சமூகத்திற்கு அழைப்பு

சர்வதேச மட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்காக புலம்பெயர் தமிழ் மக்களை இணைந்து செயற்படுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.


தமிழ் மக்கள் பேரவை கடந்த டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு செயற்பட்டுவரும் நிலையில், அதன் செயற்பாடுகள் வெற்றியளித்து வருவதாகவும் பன்முகப்பட்ட நிலையில் உரிமைகள் குறித்து பேசுவதற்கு புலம்பெயர் சமூகத்தின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் பேரவை தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்களைச் சந்தித்து தீர்வு யோசனைக்கான ஆலோசனைகள் பெறப்பட்டதாகவும், புலம்பெயர் சமூகத்தின் கருத்துக்களையும் பெறுவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் பேரவை தெரிவித்துள்ளது.

தமிழ் இன அழிப்பிற்கு பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச விசாரணைக்கான உபகுழு மற்றும் கலை, கலாசார உபகுழு ஆகிய இரண்டு உபகுழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இந்தக் குழு கடந்த 18 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு அதன் செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன.

இந்தக் குழுவின் மூலம் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும், தாயகத்தின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவுமாக இந்த உபகுழுக்கள் நிபுணர்கள் பலரை உள்வாங்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் தாயகத்தில் செயற்படும் குறித்த குழுவுடன் இணைந்து செயற்படுவதற்கு தனி நபர்களாகவும், அமைப்பு ரீதியாகவும் பங்கேற்குமாறு புலம்பெயர் தமிழர்களிடம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.