Breaking News

முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ள அரநாயக்க மீட்பு பணி



கேகாலை, அரநாயக்க மண்சரிவு மீட்பு பணிகளை நாளை(ஞாயிற்றுக்கிழமை) உடன் முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாக கேகாலை மாவட்டச் செயலாளர் டபுள்யு. எம். அபேவிக்ரம வனசூரிய தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் வாழும் மக்களின் கோரிக்கைக்கு இணங்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் கிராம மக்கள் மற்றும் மதகுருமார்களுடன் தான் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையிலும் அரநாயக்க பகுதியில் 47 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு 97 பேர் காணாமல் போயுள்ளனர்.

நேற்றுமுந்தினம்(வியாழக்கிழமை) வெளியிடப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் 1507 குடும்பங்களை சேர்ந்த 4414 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 29 வீடுகள் முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளதுடன், 84 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரநாயக்க பகுதியில் 300 இராணுவத்தினர் வரையில் மீட்புபணியில் ஈடுபட்டுவருவதாகவும் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.