மைத்திரி மஹிந்த மோதல் ; வடக்கு கிழக்கில் இராணுவ நிர்வாகத்துக்கு மேலும் வலுச்சேர்க்கும்
ஸ்ரீலங்காவில் வருடா வருடம் நடைபெறும் மே தினக்கூட்டங்களில் வழமையாக அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே ஏற்படும் கருத்து மோதல்கள் இம்முறை ஒரே கட்சிக்குள் ஏற்பட்டிருக்கின்றமை ஏனைய அரசியல் கட்சிகளுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.
அத்துடன் வடக்கு கிழக்கில் தற்போது நடைமுறையில் உள்ள நிழல் இராணுவ நிர்வாகத்துக்கும் மேலும் வலுச்சேர்க்கலாம் எனவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்த தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் உள்ள 50 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியாக செயற்படுகின்றனர்.
குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து செயற்படும் அந்த உறுப்பினர்கள் தேசிய சுதந்திர, முன்னணி, மக்கள் ஐக்கிய முன்னணி ஆகிய சிறிய கட்சிகளையும் இணைத்துக்கொண்டு தேசிய அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டு இடம்பெறும் மே தினக்கூட்டங்கள் ஊர்வலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் மேலும் இரண்டாக பிளவுபட்டும் நிலை எற்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் கொழும்பிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலியிலும் இடம்பெறும் மே தினக்கூட்டங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலத்தை மேலும் பலவீனமாக்கும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிளவு பிரதான அரசியல் கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கு பெரும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் எந்த தேர்தல் நடைபெற்றாலும் பெரும்பான்மையாக வெற்றிபெறக்கூடிய நிலை ஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்படலாம்.
இதனால் ஏனைய சிறிய கட்சிகளின் அரசியல் செயற்பாடுகளுக்கும் ஆபத்து எழக்கூடிய நிலை இருப்பதாக சுட்டிக்காட்டிய விமர்சகர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடு மே தினக்கூட்டம் முடிவடைந்ததும் மேலும் அதிகரிக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதேவேளை இனப்பிரச்சினைக்கான தீர்வும் இல்லாமல் போகக்கூடி நிலையும் பிரதான அரசியல் கட்சிகளின் மோதல்கள் முரண்பாடுகள் பொருளாதார ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
வடக்கு கிழக்கில் இராணுவம் தனியான நிழல் நிர்வாகம் ஒன்றை நடத்தி வரும் நிலையில் தென்பகுதியில் ஏற்பட்டுள்ள அரசியல் மோதல்கள் தமிழர்களை மேலும் இராணுவ நிர்வாக முறைக்குள் தள்ளிவிடலாம் என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக வடக்கு கிழக்கில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்று வரும் கைதுகள், கடத்தல்கள் அரசாங்கத்திற்கு தெரியாமல் இராணுவம் தன்னிச்சையாக மேற்கொண்ட நடவடிக்கைகள் என உயர் அரச அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.
அந்த கைதுகள் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்றும் ஆனாலும் அது தொடர்பாக தமிழ் மக்கள் அச்சமடைய வேண்டிய அவசியம் இல்லை எனவும் ஜனாதிபதி மைதிதரிபால சிறிசேன ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பில் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.