Breaking News

காணாமல் போனோர் தொடர்பில் காரியாலயம் : 7 அம்ச கோரிக்கைகள் முன்வைப்பு

காணாமல் போனவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படும் காரியாலயம் தொடர்பில் 7 அம்ச கோரிக்கைகளை முன்வைப்பதற்கு காணாமல் போனவர்களை தேடி கண்டறியும் குழு தீர்மானித்துள்ளது.

இந்த கோரிக்கை தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் முன்வைக்கப்படவேண்டிய கோரிக்கைகள் தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக காணாமல் போனவர்களை தேடி கண்டறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் தெரிவித்துள்ளார். 

கலந்துரையாடலில் காணாமல்போனவர்கள் தொடர்பான ஜெனீவா பிரதிநிதிகள், காணாமல் போனவர்களை தேடி கண்டறியும் குழுவின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கோரிக்கைகள் பின்வருமாறு

1. வெளிப்படைத்தன்மையான விசாரணை

2. கடத்தப்படுவது சர்வதேச குற்றமாக ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்

3. சர்வதேச விசாரணை

4. பாதிக்கப்படவர்களுடன் தகவல் பரிமாற்றப்படவேண்டும்

5. குற்றம் சுமத்தப்படுபவர்கள் மீது நீதியான விசாரணை இடம்பெறவேண்டும், தண்டனை வழங்கப்படவேண்டும்

6. அமைக்கப்படும் காரியாலயத்தின் ஊடாக விசாரணை செய்யும் அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்படவேண்டும்

7. இந்த அனைத்து விடயங்களும் சுதந்திரமாகவும், நம்பகத்தன்மை கொண்டதாகவும் இருக்கவேண்டும்

போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த கோரிக்கைகள் அடங்கிய பிரதி ஒன்றை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் எதிர்வரும் 10 ஆம் திகதி கையளிக்கவுள்ளதாக மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கை அரசாங்கத்தின் அனுசருணையுடன் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக காணாமல் போனவர்கள்,காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான நிரந்தர அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு இணக்கம் காணப்பட்டமை குறிப்படத்தக்கது.