தீர்வு முயற்சிகளை குழப்ப இனவாதிகள் திட்டம்!
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்போது தற்கொலை அங்கி மீட்பு, முன்னாள் போராளிகளின் கைது போன்ற புதுப் புதுப்பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார்கள். இவை தமிழ் மக்களின் தீர்வுத்திட்டத்தை திசை திருப்புவதற்காக மேற்கொள்ளப்படும் இனவாத நாடகங்களாகும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாடு பிளவுபடக்கூடாது என்ற அரசியல்வாதிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் தீர்வுத்திட்டமானது சமஷ்டி அடிப்படையில் இருக்கக்கூடாது என்று கூறுவது அரசியல் தத்துவத்துக்கு முரணாணதாகும். இலங்கையில் ஆட்சியிலுள்ள தலைவர்களின் அரசியல் அச்சங்களுக்கு தமிழர்களே பலியாகிக்கொண்டிருக்கிறார்கள்.
இலங்கையின் ஆட்சிமாற்றத்திலே சர்வ தேசத்தின் ஈடுபாடு இருந்திருக்கிறது. அதே போன்று தமிழ் மக்களும் இந்த ஆட்சிமாற்றத்தின் பங்காளிகளாக இருந்தனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சிமாற்றத்திற்காக வாக்களித்துள்ள தமிழ் மக்கள் பொதுத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் பெருமளவில் வாக்களித்துள்ளனர். இவ்வாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஏற்று எங்களை தெரிவுசெய்ததற்குக் காரணம் நாங்களும் நல்லாட்சி அரசில் பங்கேற்று சர்வதேசத்தின் உதவியுடன் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத்தீர்வு காணவேண்டும் என்பதற்காகவே. மேலும் தமிழ் மக்களின் தீர்ப்பை ஏற்ற நாங்கள் சர்வதேசத்தின் உதவியையும் இழந்துவிடக்கூடாது.
நல்லாட்சி அரசாங்கம் ஒரு பக்கம் இராணுவத்தினரின் கைவசமுள்ள காணிகளை விடுவிக்கிறது. மறுபக்கமோ மக்களின் காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடமுன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்பொழுது இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகள் அனைத்தும் மக்களுக்கு மீண்டும் கையளிக்கப்படும் என வாக்குறுதியளித்திருந்தார். இதை தனது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இந்த காணி விவகாரம் இன்னும் இழுபறி நிலையிலேயே இருக்கின்றது. அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இன்னும் மூன்று நான்கு மாதங்களில் அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். ஆனால் நடைமுறையில் எதுவும் இடம்பெறுவதாகத்தெரியவில்லை.
மற்றையது அரசியல் கைதிகளின் விடயம். ஏற்கனவே இவர்களை விடுவிப்பதாக அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், அவர்களை விடுதலை செய்வதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த ஒரு சில கைதிகளால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறுவது பொய்யான விடயமாகும் என்றார்.