எமக்குள் ஒற்றுமையின்மையே தீர்வுக்காக ஐ.நா வரை செல்ல நேரிட்டுள்ளது : செல்வம்
தமிழர்கள் ஆரம்பத்திலேயே ஒற்றுமையாக செயற்பட்டிருந்தால், தமது பிரச்சினைக்கு என்றோ ஒரு கௌரவமான தீர்வு கிடைத்திருக்கும் என்றும், தமக்குள் முரண்பட்டுக் கொண்டமையினாலேயே இன்று தீர்வுக்காக ஐ.நா வரை செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதென்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவரான அமரர் சிறி சபாரத்தினத்தின் 30ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு தலைமைதாங்கி உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மீதும் புதிய அரசாங்கத்தின் மீதும் வைத்துள்ள நம்பிக்கை அழிந்துபோகின்ற நிலையில், இராணுவத்தின் கெடுபிடிகள், வெள்ளைவான் கடத்தல்கள், புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் கைதுசெய்யப்பட்டு, வடக்கு கிழக்கில் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், தென்னிலங்கையில் மஹிந்த ராஜபக்ஷவின் அணியினர் தமிழ் மக்கள் சார்பான ஒவ்வொரு விடயத்திற்கும் எதிர்ப்பினை தெரிவித்துக்கொண்டிருக்கும் நிலையில், நாம் ஒற்றுமைப்படாவிட்டால், பல தியாகங்களை செய்த தமிழினம் கையேந்தும் நிலைக்குச் சென்றுவிடும் என செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.