வித்தியாவின் குடும்பத்தினருக்கு கொலை அச்சுறுத்தல்
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய் மற்றும் சகோதரனுக்கு வித்தியா கொலை வழக்கு சந்தேக நபர்களின் உறவினர்கள் நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக சட்டத்தரணி மணிவண்ணன் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
வித்தியாவின் படுகொலை தொடர்பிலான வழக்கு இன்று(திங்கட்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.றியாழ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சட்டத்தரணி மணிவண்ணன் இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
கடந்த வழக்கு தவணையின் போது வழக்கு விசாரணையின் நிறைவில் நீதிமன்ற வளாகத்தில் வைத்து வித்தியாவின் தாய் மற்றும் சகோதரனுக்கு வித்தியா கொலை வழக்கு சந்தேக நபர்களின் உறவினர்கள் கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்ததுடன், அவர்களை தகாத வார்த்தையினால் திட்டியதாகவும் சட்டத்தரணி தெரிவித்தார்.
இதன்காரணமாக வித்தியாவின் தாய் மற்றும் சகோதரன் ஆகியோர் நீதிமன்றம் வர அஞ்சுவதாகவும் எனவே இதுதொடர்பில் சாட்சியம் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றத்திடம் சட்டத்தரணி மணிவண்ணன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தநிலையில், இதற்கு பதிலளித்த நீதிபதி குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.
அத்துடன், இந்த வழக்கு மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதன் காரணமாக பொலிஸார் இந்த வழக்கு தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் பொலிஸாரிற்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.








