Breaking News

வட மாகாண முதலமைச்சருடன் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு



வட மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டொரிஸ் தற்போது வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கடந்த ஆறாம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் இன்று (வெள்ளிக்கிழமை) வடக்கிற்கு விஜயம் செய்துள்ளார். இந்நிலையில், முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு விஜயம் செய்திருந்த உயர்ஸ்தானிகர், கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்திருந்த நிலையில், அவர்கள் தங்களது வாழ்வாதார மற்றும் வீடுகளின் தேவைகள் தொடர்பில் அவரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

அதேவேளை, யுத்தக் காலத்தில் காணாமல் போனோரின் உறவினர்களையும் சந்தித்து கலந்துரையாடிய அவர், பிரித்தானியாவின் ஆதரவுடனான வீட்டுத் திட்டத்தில் குடியேறியுள்ள மக்களையும் சந்தித்துள்ளார்.

நேற்று முன்தினம் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்திருந்த ஜேம்ஸ் டொரிஸ், திருகோணமலை ஆயர் நோயல் இம்மானுவேல் மற்றும் உள்ளூர் சமூகத்தினரை சந்தித்து கிழக்கின் முன்னேற்றம் மற்றும் எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்து கேட்டறிந்துள்ளார். பின்னர் திருகோணமலை முஸ்லிம் சமூகத்தினரை சந்தித்த அவர், அரசியலமைப்பு மாற்றம் குறித்த அவர்களது கருத்துக்களை கேட்டறிந்துள்ளார்.

மேலும் கடந்த ஆறாம் திகதி எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை சந்தித்து அரசியலமைப்பு சீர்த்திருத்தம் குறித்து விவாதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.