கச்சத்தீவு விவகாரம் - என் மீது வசைபுராணம் பாடுவதை ஜெயலலிதா நிறுத்துவது நல்லது!
கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக, என் மீது வசைபுராணம் பாடுவதை முதல்வர் ஜெயலலிதா இனியாவது நிறுத்திக் கொள்வது நல்லது என்று கருணாநிதி தெரிவித்து உள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் நேற்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, தி.மு.க. உறுப்பினர் பொன்முடிக்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, "தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதுதான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது. கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டபோது கருணாநிதி என்ன செய்து கொண்டிருந்தார்.
கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்க கருணாநிதி ஏன் அனுமதித்தார். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கச்சத்தீவை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் படும் துயரத்திற்கு தி.முக. தான் காரணம். எதிர்க்கட்சிகள் எவ்வளவு கூச்சல் போட்டாலும் கச்சத்தீவை தாரை வார்த்தது திமு.க. தான்.
கச்சத்தீவு குறித்த பேச தி.மு.க.வுக்கு அருகதை கிடையாது. கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற எண்ணம் தி.மு.க.வுக்கு இல்லை. உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கில், தி.மு.க. தன்னை இணைத்துக் கொள்ளாதது ஏன்? அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கச்சத்தீவு தொடர்பான வழக்கில் அரசு இணைத்துக் கொள்ளப்பட்டது" என்று ஆவேசமாக பேசினார்.
இதற்கு தனது முகநூலில் இன்று பதில் அளித்துள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி, ''கச்சத் தீவை இந்தியா தாரை வார்த்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் நான் இருந்ததாகச் சொல்கிறாரே, நான் தெரிவித்த எதிர்ப்பை ஆதார பூர்வமாக எடுத்துச் சொன்னால், தவறு என்று மன்னிப்பு கேட்க ஜெயலலிதா தயாராக இருக்கிறாரா?
கச்சத் தீவைப் பொறுத்தவரையில், அதனைத் தாரைவார்க்க நான் எந்தக் காலத்திலும் ஒப்புக் கொண்டதும் இல்லை; உடன்பட்டதும் இல்லை. தமிழகத்தின் முதலமைச்சர் என்ற முறையில் என்னுடைய எதிர்ப்பை நான் அப்போதே தெரிவித்திருக்கிறேன். உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து அவர்களிடம் கருத்தறிந்திருக்கிறேன். ஆனால் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் ஒரே ஒரு முறையாவது தமிழ்நாட்டிலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்து கச்சத் தீவை மீட்பது பற்றி கலந்தாலோசனை நடத்தியது உண்டா?
நான் முதலமைச்சராக இருந்த காலத்தில், எந்த அளவுக்கு கச்சத் தீவினை மீண்டும் பெறுவதற்காகப் போராட முடியுமோ, வாதாட முடியுமோ அந்த அளவுக்கு போராடியிருக்கிறேன், வாதாடி இருக்கிறேன். ஆனால் எந்தப் பிரச்னையிலும் இரட்டை வேடம் போடும் ஜெயலலிதா, கச்சத் தீவுப் பிரச்னையில், ''கச்சத் தீவை மீட்பது விரைவில் நடக்கக் கூடிய ஒன்றாகத் தெரியவில்லை" என்றும், ''கச்சத் தீவைப் பிரித்துக் கொடுத்தது,
இரு நாடுகளுக்குமிடையே நல்லுறவு வேண்டும் என்பதற்காகத் தான்" என்றும்; ''கச்சத்தீவில் இலங்கை நாட்டுக்குள்ள இறையாண்மையை ஏற்றுக் கொள்ளலாம்" என்றும்; சொன்னவர் என்பது பதிவாகி இருக்கிறது. அதனால், ஜெயலலிதா அவ்வப்போது நினைத்துக் கொண்டு என் மீது வசைபுராணம் பாடுவதை இனியாவது நிறுத்திக் கொள்வது நல்லது" என்று விளக்கம் அளித்துள்ளார்.








