Breaking News

யுத்த குற்றம் இடம்பெற்றதை ஏற்றுக்கொண்டது இலங்கை அரசு : பீரிஸ்



விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது, இலங்கை படையினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டார்கள் என அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக, முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், மஹிந்த அணியின் முக்கியஸ்தருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி விசாரணைப் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு இடம்பெறாது என்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறினார்.

ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வுகள் இடம்பெறுக்கின்ற நிலையில், அது குறித்து தெளிவுபடுத்துகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியுள்ளதன் மூலம், அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை ஏற்றுக்கொண்டுள்ளது. அரசாங்கம் அந்த தீர்மானத்திற்கு அனுசரனை வழங்கியதனால், சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது. எனவே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகளை அரசாங்கம் வாசித்து புரிந்து கொண்டதா? என்றும் எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

ஐ.நா தீர்மானத்தில், இலங்கை படையினர் பொதுமக்களை கொலை செய்ததாகவும், சட்டவிரோத படுகொலைகளில் ஈடுபட்டார்கள் என நம்புவதற்கு போதியளவு ஏதுக்கள் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி, பாதுகாப்பு படையினர் சட்டவிரோத கைதுகள் மற்றும் தடுத்து வைத்தல்களில் நீண்ட காலமாக ஈடுபட்டு, கொடூரமான சித்திரவதைகளில் ஈடுபட்டதாகவும், காணாமல் போனவர்களின் உறவினர்களது உரிமைகளை அரசாங்கம் முடக்கியதாகவும் ஐ.நா பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கு விசாரணை அவசியம் என்றும், அந்த விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச சட்டத்தரணிகள், நீதிபகள் உள்ளடக்கப்படவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டு தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியுள்ளது.

இவ்வாறான ஒரு நிலையில், வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடன் யுத்தக் குற்றச் செயல் விசாரணைப் பொறிமுறைமை அமையாது என்ற ஜனாதிபதி மற்றும் பிரதமர் கூறுகின்றனர். அவர்களின் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.” என்றும் கூறிநனார்.