தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் (படங்கள் இணைப்பு)
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததாக தெரிவித்து இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் தமது மீன்பிடி உபகரணங்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தமிழக மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை காலை இராமேஸ்வரத்திலிருந்து 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர். இவர்களை கச்சதீவுக்கு அருகே செல்லவிடாமல் இரவு 7 மணிவரை ஸ்ரீலங்கா கடற்படையினர் அச்சுறுத்தியுறுத்தியதனால், தாம் தொழிலை மேற்கொள்ள முடியாதிருந்ததாகவும்,
பின்னர் இரவு மீன்பிடித்துவிட்டு அதிகாலை கரை திரும்பும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளிலிருந்த பல இலட்சம் ரூபா மதிப்பிலான மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தியதாகவும் அவர்கள் சாடியுள்ளனர்.
இதனால் தொழிலை மேற்கொள்ள முடியாது தாம் கரைதிரும்பியதாக தமிழக மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்திய எல்லையில் கூட மீன்பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தொழிலுக்குச் சென்றால் உயிருடன் கரை திரும்புவது கேள்விக்குறியாக உள்ளது எனவும் கவலை வெளியிட்ட மீனவர்கள்,
கச்சதீவை மத்திய மாநில அரசுகள் மீளப்பெற்றால் மாத்திரமே தமிழக மீனவர்கள் சுதந்திரமாக தமது தொழிலை மேற்கொள்ள முடியும் எனவும் எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து தம்மையும் தமது வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற வேண்டும் எனவும் இந்திய மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.










