Breaking News

‘நான் நினைத்தால் தேர்தலை நடத்துவேன்’ : மஹிந்த



எல்லை நிர்ணய பணிகள் நிறைவு பெற்றாலும், இல்லாவிட்டாலும், தம்மால் தேர்தலை நடத்த முடியும் என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

எனினும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெறுவதால், தேர்தலை காலம் தாழ்த்த வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொழும்பு ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியாலளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

“எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் குழப்ப நிலைகள் உள்ளன. தேர்தல் காலதாமதம் ஆவது தொடர்பில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு பொறுப்புகூற வேண்டியவர்களான உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு, வழக்கிலிருந்து விலகிக்கொண்டுள்ளது.

எமக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்ற தேர்தல் முறைமையில் பல திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. அதில் 17 காரணிகள் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அதனால் அவற்றில் திருத்தம் மேற்கொள்வது குறித்து கடிதம் மூலம் அறிவித்துள்ளேன்.

எல்லை நிர்ணய பணிகள் தற்போது எந்த கட்டத்தில் உள்ளன என்பது தொடர்பில் அமைச்சிடம் எழுத்து மூலம் வினவியிருந்தபோதும் அதற்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை.

தேர்தல்கள் ஆணைக்குழுவும் செயலகமும் தேர்தல் நடத்துவதற்காக ஸ்தாபிக்கப்பட்டதே தவிர தேர்தலை காலம் தாழத்துவதற்கு அல்ல. எனவே எல்லை நிர்ணய பணிகள் நிறைவு பெற்றாலும் இல்லாவிட்டாலும் எம்மால் தேர்தலை நடத்த முடியும். ஆனால் நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட விவகாரங்களினால் தேர்தலை காலம் தாழ்த்த வேண்டியுள்ளது.

அதேநேரம் தேர்தல் நடத்தாமைக்கான முக்கிய காரணங்­களை நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளமையினால் தற்போது அது தொடர்பில கருத்து வெளியிட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.” என்றும் கூறினார்.