Breaking News

வவுனியாவில் கடத்தப்பட்ட வர்த்தகர் விடுவிப்பு



வவுனியாவில் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட வர்த்தகர் இன்று புதன்கிழமை நண்பகல் அளவில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வவுனியாவில் எஸ்.எஸ்.ஆர் என்ற பெயரில் வர்த்தக நிலையம் மற்றும் அரிசி ஆலை என்பவற்றை நடத்திவரும் இவர், நேற்றிரவு 7 மணியளவில் தனது வர்த்தக நிலையத்தில் இருந்து வீடு நோக்கி சென்ற போது கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் தீவிரமான மேற்கொண்டிருந்த நிலையில் இன்று வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியில் வைத்து அவர் விடுவிக்கப்பட்டதாகவும் அங்கிருந்த முற்சக்கரவண்டியொன்றில் அவர் வவுனியாவை வந்தடைந்ததாகவும் தெரியவருகின்றது.

இந்த நிலையில் குறித்த வர்த்தகரிடம் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, வவுனியா வர்த்தகர் சங்கத்தால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முழுக்கதவடைப்பு போராட்டமும் கைவிடப்பட்டுள்ளதாக வர்த்தக சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.

வவுனியாவில் பிரபல வர்த்தகரான சண்முகம் செல்வராஜா என்ற 55 வயதுடைய வர்த்தகரே இவ்வாறு கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சண்முகம் முதலாளி என அழைக்கப்பட்ட சண்முகம் ஸ்ரோர்ஸ் மற்றும் அரிசி ஆலைகளின் உரிமையாளராகிய பிரபல முன்னாள் வர்த்தகர் சண்முகம் என்பவரின் புதல்வரான செல்வராஜா எஸ்எஸ்ஆர் முதலாளி என வவுனியா மக்களுக்கு மத்தியில் நன்கு அறியப்பட்ட பிரபல வர்த்தகர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இவரை யார் என்ன தேவைக்காக கடத்தினார்கள் என்பது குறித்து தெரியாதிருப்பதால் வவுனியா வர்த்தகர் சமூகத்தினர் மத்தியில் மாத்திரமன்றி வவுனியாவில் வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.