Breaking News

இராணுவம் கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தவில்லை?



ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் கூட்டத்தொடர் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் ஸ்ரீலங்காவின் நற்பெயருக்கு பங்கம் ஏற்படுத்தும் நோக்கிலேயே கிளஸ்டர் குண்டுகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் விசனம் வெளியிட்டுள்ளது.

இறுதிப்போரில் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட பிரித்தானியாவின் தி கார்டியன் ஊடகம், அதற்கான ஆதாரங்களாக புகைப்படங்கள் சிலவற்றையும் வெளியிட்டிருந்தது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றபோது இதுதொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த பதில் அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், கொத்துக்குண்டுகள் இறுதி யுத்தத்தின்போது பயன்படுத்தப்பட்டமைக்கான ஆதாரங்கள் இல்லை என்றும் அப்படிப் பயன்படுத்தியிருந்தாலும் இராணுவத்தினரே இதற்குக் காரணம் என்று எவ்வாறு சந்தேகம் தெரிவிப்பது என்றும் அவர் பதில்கேள்வி எழுப்பினார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இதுபோன்ற பல புகைப்படங்கள் ஆரம்பத்திலிருந்து வந்துக்கொண்டு தானே இருக்கின்றன. அத்தோடு, இவை ஸ்ரீலங்காவில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதற்கு ஆதாரம் உள்ளதா?

மீட்கப்பட்டதாக கூறப்படும் கொத்தணிக் குண்டுகளில் எங்கேயாவது ஸ்ரீலங்கா இராணுவத்தின் அடையாளங்கள் உள்ளனவா? அத்தோடு, அப்படிப் பயன்படுத்தியிருந்தாலும் இராணுவத்தினர் தான் பயன்படுத்தியிருப்பார்கள் என்பதை எந்த அடிப்படையில் உறுதிசெய்ய முடியும்?

அதனை தமிழீழ விடுதலைப் புலிகளும் பயன்படுத்தியிருக்கலாம் தானே.

மேலும், ஸ்ரீலங்காவில் கண்ணிவெடி அகழ்வுகள் இடம்பெற்று ஆறு வருடங்களைக் கடந்து விட்டன. இந்த இடைப்பட்ட காலத்துக்குள் எதனையும் வெளியிடாமல் இப்போது மட்டும் ஏன் இவ்வாறான புகைப்படங்களை ஸ்ரீலங்காவிற்கு எதிராக வெளியிட வேண்டும். இதனை நாம் எவ்வாறு முழுமையாக ஏற்றுக் கொள்வது என்று தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட ஊடகத்துறைப் பிரதியமைச்சர் கருணாசேன பரணவித்தாரண,

கண்ணி வெடி அகற்றல் செயற்பாட்டில் ஈடுபடுகின்ற நபர்கள் அதுபற்றிய தகவல்களை வெளியிடுவதே சட்டவிரோதமானது. இந்நிலையில், ஜெனீவாவில் ஐ.நா. கூட்டத்தொடர் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் இவ்வாறான தகவல்களை வெளியிடப்பட்டுள்ளதானது ஸ்ரீலங்காவின் நற்பெயருக்கு சர்வதேச மட்டத்தில் குந்தகம் ஏற்படுத்தும் நோக்கம் என்றே நாம் கருதுகின்றோம் – என்று கூறினார்.