பாடசாலை மாணவிகள் சுரண்டப்படுவதற்கு வடக்கு கல்வி அமைச்சே மூல காரணம்!
வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் அண்மைக் காலமாக ஆசிரியர்களின் பாலியல் லீலைகள் அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டிய வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு எந்தவித அக்கறையும் இன்றி இருப்பது குறித்து பெற்றோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.
மாணவிகள் மீது பாலியல் பலாத்காரத்தை பிரயோகிக்கும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்காமல் அவர்களை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்று கோரியுள்ள பெற்றோர், அவ்வாறு செய்யாவிட்டால் வடக்கு கல்வி அமைச்சுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடவேண்டிவரும் என்றும் எச்சரித்துள்ளனர்.
நேற்று பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் மற்றும் பாலியல் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது வடக்கு மாகாணக் கல்வி அமைச்சரோ பொறுப்புடைய உறுப்பினர்களோ வருகை தரவில்லை என்றும் இது அவர்களின் அக்கறையற்ற தன்மையை வெளிக்காட்டுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பெற்றோர் மேலும் தெரிவிக்கையில்,
இதுவரை காலமும் சில பெரிய பாடசாலைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இடம்பெற்று வந்த மாணவிகள் மீதான பாலியல் பலாத்காரங்கள் தற்போது சிறிய பாடசாலைகளுக்குள்ளும் ஊடுருவியுள்ளது.
ஆசிரியர்கள் மாணவிகளை உள்ளே வைத்து உணர்ச்சியூட்டி அனுப்பும்போது அவர்கள் வெளியே தப்புச் செய்யக்கூடிய நிலை ஏற்படுவது இயல்பானது. இதனால் கல்வியில் அக்கறையற்ற தன்மை ஏற்பட்டு பெறுபேறுகள் குறைகின்றன. இவ்வாறு நடந்த பின்னர் கல்வி வீழ்ச்சி என்றும் அதை ஆராய நடவடிக்கை என்றும் அறிக்கை விடுவதிலேயே எமது அரசியல்வாதிகள் காலத்தைக் கழிக்கின்றனர்.
குறிப்பாக ஆராய்ந்தால் வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்று கல்வி அமைச்சராக த.குருகுலராஜா பொறுப்பேற்ற பின்னரே பாடசாலைகளில் மாணவிகள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துச் செல்கின்றன. வடக்கு கல்வி அமைச்சின் செயற்றிறன் அற்ற நடவடிக்கையே இதற்கு காரணமாகும்.
இந்த மோசமான நிலையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும். இதன் மூலமே எமது பிள்ளைகளை பாதுகாக்க முடியும். அவ்வாறு இல்லாமல் தொடர்ந்தும் ஆசிரியர்கள் மாணவிகள் மீது பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டால் நாங்கள் வடக்கு கல்வி அமைச்சுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கவேண்டி ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.








