Breaking News

முள்ளிவாய்க்காலில் நடுவீதியில் நின்று பேரூந்து சாரதிகள் சண்டை!



இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேரூந்துகள் முள்ளிவாக்கால் பகுதியில் நடுவீதியில் நிறுத்தி நீண்ட நேரம் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டமையினால் பேரூந்தில் பயணித்த பயணிகள் மற்றும் வீதியால் பயணித்தவர்கள் பெரும் அவதிக்குள்ளாகிய சம்பவம் 22.06.2016 மாலை இடம்பெற்றுள்ளது.

கொக்குத்தெடுவாய் பருத்தித்துறை பேரூந்து மற்றும் திருகோணமலை- யாழ்ப்பாணம் பேரூந்து ஆகிய இரண்டு பேரூந்துகளும் குறித்த வீதியின் நடுவில் நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டு சாரதிகள் தகராறில் ஈடுப்பட்டனர்.

இரண்டு பேரூந்துகளும் பயணிகளின் பாதுகாப்பை கொஞ்சமும் கருத்தில் எடுக்காது, வீதியில் பயணிப்போருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிக வேகமாக வாகனத்தைச் செலுத்தியதோடு ஒருவரையொருவர் முந்திக்கொள்ளும் வகையில் பேரூந்து சமிஞ்கை விளக்குகளை கூட சரியாக பயன்படுத்தாது செயற்பட்டமை பயணிகள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்தோடு பயணிகளை அவர்கள் இறங்க வேண்டிய உரிய இடத்தில் இறக்கிவிடாது தாங்கள் விரும்பிய இடங்களில் இறக்கிவிட்டு வந்த சம்பவங்களும் இடம்பெற்றது.

குறிப்பாக கொக்குத்தொடுவாய்ப- ருத்திதுறை பேரூந்து தொழிற்பயிற்சிக்கு சென்று திரும்பிய இரண்டு யுவதிகளை அவர்கள் இறங்க வேண்டிய இடத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் அப்பால் சென்று இறக்கியது மட்டுமன்றி, நடத்துனர் இரண்டு யுவதிகளையும் கடுமையாக திட்டியுமுள்ளார்.

இதனால் அழுதவாறே இரண்டு யுவதிகளும் பேரூந்திலிருந்து இறங்கி புதுக்குடியிருப்பு- முல்லைத்தீவு பாதையில் மாத்தளன் நோக்கிச்செல்லும் சந்திவரை திரும்பி நடந்துவந்த அவலமும் நடந்துள்ளது.

இதனைவிட வீதியால் பயணித்த ஏனைய வாகனங்கள் மற்றும் பொது மக்களும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

இவர்களின் இந்த முரண்பாடுகளின் போது முல்லைத்தீவிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த முல்லைத்தீவு அரச அதிபரின் வாகனம் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வந்தமையினை அவதானித்த பின்னரே கொக்குத்தொடுவாய்ப- ருத்துறை பேருந்து சாரதி தன்னுடைய பேரூந்தை நடு வீதியில் இருந்து எடுத்துச்சென்றார்.

இருந்தும் அவர் தனது ஆபத்துமிக்க ஓட்டத்தை கைவிடவில்லை. இதனால் பல இடங்களில் பயணிகள் கூச்சல் இட்டமையும் அவதானிக்க முடிந்தது.