Breaking News

வெலிக்கடை சம்பவம் : ஐ.நா. அலுவகத்தில் முறைப்பாடு செய்ய தீர்மானம்

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது உயிரிழந்த கைதிகள் தொடர்பில் உரிய விசாரணைகளை அரசாங்கம் முன்னெடுக்கா தமையால் கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் இன்று முறைப்பாடு செய்யவுள்ளதாக கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆட்சியின் போது வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள தற்போதைய அரசாங்கத்தால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

விசாரணை அறிக்கை, பிரதமர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்ட போதும் சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

எனவே குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது என அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைதிகளுக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 27 கைதிகள் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.