Breaking News

வட மாகாண மக்களின் காணிப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக விசேட இணக்க சபை

யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட வட மாகாண மக்களின் காணி, வீடு மற்றும் உடைமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக விசேட இணக்க சபையை நியமிப்பதற்கு நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.


இதற்கான நடவடிக்கைகள் நீதி அமைச்சின் இணக்க சபை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இணக்க சபையின் உறுப்பினர்களுக்கான நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் வட மாகாண மக்கள் இழந்த தமது பூர்வீக காணிகள், வீடுகளின் மற்றும் உடைமைகளின் சட்டரீதியான உரிமையாளர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உண்மையான உரிமையாளர்களிடம் அவர்களின் உடைமைகளை ஒப்படைப்பதற்கு அரசாங்கம் விசேட விதிமுறைகள் சட்டத்தையும் அண்மையில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் வட மாகாணத்தில் வாழ்ந்து வரும் மக்களின் காணியுரிமையை உறுதிசெய்வதில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.