Breaking News

மியன்மார் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளை தடுக்கவும் – ஐ.நா. வலியுறுத்து



மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் மனித உரிமை மீறல்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களாகவே கருதப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ரக்கைன் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்களுக்கெதிரான திட்டமிட்ட பாகுபாடு மற்றும் மனித உரிமை மீறல்களை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென மியன்மாரின் புதிய அரசுக்கு மனித உரிமை ஆணையாளர் சைட் அல் ஹுசைன் வலியுறுத்தியிருந்தார்.

அந்த அறிக்கையில், “தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில் உள்ள சிறுபான்மை இனத்தவர்களான ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக குடியுரிமை மறுப்பு, கட்டாய உழைப்பு மற்றும் பாலியல் வன்முறை உள்ளிட்ட பல மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருகின்றன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் வன்முறைகள் மனித உரிமை மீறல்களின் ஒரு வகை. இது பரவலான அல்லது திட்டமிடப்பட்ட தாக்குதலாகப் பரிந்துரைக்கப்படும் பட்சத்தில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் மனித குலத்திற்கு எதிரான தீவிர வன்முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை இடம்பெறும்” எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் அனைத்து மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், மியன்மார் அரசாங்கம் விரிவான மற்றும் சுதந்திரமான விசாரணையை நடத்த வேண்டும் எனவும் ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் இந்த அறிக்கையினூடாக அழைப்பு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது