மஹிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – பிரதமர் அதிரடி
முன்னாள் ஜனாதிபதியும் நிதியமைச்சருமாக செயற்பட்ட மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் அனுமதி பெறாது 1.2 ரில்லியன் ரூபாவை வெளிநாட்டுக் கடனாக பெற்றமை தொடர்பில் நிதி குறித்த பாராளுமன்ற தெரிவுக் குழுவிடம் அறிக்கை கோரப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதியும் நிதியமைச்சரும் தற்போதைய குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராகவே நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டிருக்க வேண்டுமென தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவரை ஒருவார காலத்திற்கு விடுமுறையளித்து உகண்டாவுக்கு அனுப்பி வைக்க வேண்டுமெனவும் குறிப்பிட் டார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவு அணியான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
கடந்த ஆட்சிக்காலத்தில் நிதி அமைச்சராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே இருந்தார். அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்திருக்க முடியுமா?
தற்போதைய ஆட்சியில் நிதி அமைச்சர் ஜனாதிபதியாக இல்லாததன் காரணத்தாலேயே உங்களால் இவ்வாறு பிரேரணை கொண்டுவர முடிகின்றது. எதிராக பேச முடிகின்றது.
இந்நாட்டில் காணப்படும் சட்டங்களை பாராளுமன்ற அதிகாரங்களை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெறாது மறைத்து 1.2 ரில்லியன் நிதியை வெளிநாட்டுக் கடனாக பெற்றுக் கொண்ட முன்னாள் ஜனாதிபதியும் நிதி அமைச்சருமாக செயற்பட்ட மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை அப்போது கொண்டு வந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாது இருந்தார்கள்.
குறித்த கடன் பெற்றுக் கொண்டமை தொடர்பாக நிதி குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவிடம் அறிக்கையொன்றைக் கோரவுள்ளேன்.
அதேநேரம் தற்போது நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்துள்ளீர்கள். இதில் மஹிந்த ராஜபக்ஷ ஏன் கைச்சாத்திடவில்லை. அவர் ஏன் இந்த விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை?.
அவர் இந்த பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு எமது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியுமா?
தற்போது பாராளுமன்ற உறுப்பினராகவுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒருவார கால விடுமுறை வழங்கி உகண்டாவுக்கு தான் அனுப்பி வைக்க முடியும்.
நாங்கள் மக்களின் பணத்தை திருடவில்லை. டுபாயில் பணத்தை வைப்பிலிடவில்லை. லம்போகினி கார்களை இறக்குமதி செய்யவில்லை. தமது குடும்பத்தினருக்கு விசுவாசமானவர்களும் கடந்த ஆட்சி காலத்தில் மிதிபலகையில் பயணம் செய்தவர்களும் தான் எம்மை விமர்சித்தவாறு உள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டு விஜயங்களின் போது பல்வேறு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று மானியங்கள், நிதியுதவிகளை தாராளமாக பெற்று வருகின்றார்.கடந்த நான்கு தினங்களுக்கு முன்னதாக 4 பில்லியன் ரூபா நிதியுடன் தான் நாட்டுக்கு வந்திருந்தார்.
எனவே நீங்கள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக செயற்படுகின்றீர்களா? அல்லது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக செயற்படுகின்றீர்களா என்ற சந்தேகம் காணப்படுகின்றது.
நீங்கள் பொது எதிரணியினர் எனக் கூறி தொடர்ந்தும் துரோகிகளாகவே இருக்க விரும்புகின்றீர்களா?
நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு காரணமாக பத்திரிகை செய்தியொன்றை காட்டுமளவுக்கு வங்குரோத்தான நிலையிலேயே உள்ளீர்கள்.
உங்கள் பிரேரணையை இலகுவாக தோற்கடிப்போம். அத்தோடு எமது அரசாங்கம் பொருளாதார ரீதியான உரிய இலக்குகளை அடைவது உறுதி என்றார்.