Breaking News

நீதியை குழிதோண்டி புதைக்கிறார்கள் : சிவமோகன் காட்டம்



யுத்தகுற்ற விசாரணைகளை உரிய முறையில் நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டிய அரசாங்கம், அதனை விடுத்து குற்றவாளிகளை காப்பாற்றி நீதியை குழிதோண்டி புதைக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோன் தெரிவித்தார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்றில் அமர்வில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”காணாமல் போனவர்கள் எல்லாம் தானாக காணாமல் போகவில்லை. சட்டத்திற்கு புறம்பாக, இலங்கை அரசின் பாதுகாப்பு படையினராலும் புலனாய்வு பிரிவினராலும் கடத்தப்பட்ட பின்னர் காணாமல் செய்யப்பட்டனர். அவற்றுக்கான ஆதாரத்துடன் அவர்களது குடும்பத்தினர் தவிக்கின்றனர்.

அத்தோடு, வெள்ளை வான் தமிழர்களை மட்டுமன்றி, சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களையும் கடத்தியது. அரசை பொறுப்பெடுத்தவர்கள், அரசியல் யாப்பிற்கு முரணாகவும் சட்டத்திற்கு புறம்பாகவும் எதற்காக செயற்பட்டார்கள்?

இன்று ஐ.நா சபைக்கு உண்மையை கூறவேண்டியதும், செய்த குற்றங்களுக்கு பிராயச்சித்தம் தேட வேண்டியதும், குற்றவாளிகளை தண்டிக்க வேண்டியதும் இந்த அரசின் கடமையாகும். அவற்றை விடுத்து, அனைத்தையும் மூடி மறைத்து குற்றவாளிகளை காப்பாற்றி நீதியை குழிதோண்டி புதைக்கிறார்கள்” என்றார்.