Breaking News

சிதம்பரபுரம் மக்களுக்கு நிரந்தரக் காணி - வழங்கி வைத்தார் முதல்வர்



வவுனியா – சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்தில் கடந்த 24 வருடங்களாக வசித்துவந்த மக்களுக்கு அவர்கள் வாழ்ந்த பிரதேசத்திலேயே காணிகள் வழங்கப்பட்டு இன்று காணி அனுமதிப்பத்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

வடக்கில் ஏற்பட்ட யுத்தத்தால் சொந்த இடத்தை விட்டு வெளியெறி இந்தியா மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் வசித்து வந்த மக்கள் 1992 ஆம் ஆண்டு சிதம்பரபுரம் பகுதியில் நலன்புரி நிலையம் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் 193 குடும்பங்கள் தொடர்ந்தும் முகாம் அமைந்துள்ள பகுதிகளிலேயே வசித்து வந்திருந்ததுடன், தாம் வசிக்கும் பகுதியிலேயே காணிகளை வழங்க வேண்டும் எனவும் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

இந் நிலையில் காணிகளை அதே இடத்தில் வழங்குவதற்கும் காணி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கும் வட மாகாணசபையினால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந் நிலையில் குடும்பத்திற்கு 6 பரப்பு என்ற அடிப்படையில் 193 பேருக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான அனுமதிப்பத்திரங்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.

இன்றைய தினம் சம்பிரதாயபூர்வமாக அதிதிகளால் 10 பேருக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தபோதிலும் ஏனையவர்களின் அனுமதிப்பத்திரங்களை பிரதேச செயலகத்தின் ஊடாக விநியோகிக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், மத்திய மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன், வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், வட மாகாணசபை உறுப்பினர்காளன ஆர்.இந்திரராசா, எம்.தியாகராசா, ஏ.ஜயதிலக, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோகண புஸ்பகுமார, வவுனியா பிரதேச செயலாளர் கா. உதயராசா உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.