Breaking News

ராஜபக்ஷ குடும்பத்தினரிடமிருந்து மக்களை காப்பாற்றவே அரசியலிற்குள் பிரவேசித்தேன்!



ராஜபக்ஷ குடும்பத்தினரின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து மக்களைக் காப்பாற்றவே தான் அரசியலில் பிரவேசித்ததாகவும், தற்போது அந்த நோக்கத்திற்காகவே ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டதாகவும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இன்று(வியாழக்கிழமை) இணைந்துகொண்டு களனி அமைப்பாளர் பதவியை பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இந்த நாட்டில் நல்லாட்சி என்பதை நிலைநாட்ட வேண்டும் என்று 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் மேடையில் வைத்து கூறியிருந்தேன்.

நல்லாட்சி என்பது இதற்கு முன்னர் இந்நாட்டில் அறியப்படாத பொருளாக இருந்தது. அதற்கு அப்போதிருந்த அரசியல்வாதிகளும் விருப்பம் தெரிவிக்கவில்லை.

எனினும் நாங்கள் கூறியிருந்த நோக்கங்கள் அனைத்தும் இன்று நிறைவேறியுள்ளன. ராஜபக்சவின் ஆட்சியிலிருந்து நாட்டை மீட்டுள்ளோம். வெறித்தனம், இலஞ்சம், தரகுப்பணம், சூறையாடல், மது ஆகியவற்றை விடுத்து சிறந்த அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த நல்லாட்சி அரசாங்கம் தலைமைத்துவத்தை ஏற்றிருக்கிறது.

மஹிந்த சிந்தனையின் அச்சுறுத்தல் இன்னும் இந்த நாட்டிலிருந்து முழுமையாக நீங்கவில்லை. அதனை நாங்கள் கீழ்ப்படுத்தியிருக்கின்றோம். எனினும் உயிரிழந்தவரது ஆவியைப் போல அது மீண்டும் எழும்பப் பார்க்கின்றது.

எனவே இந்த அச்சுறுத்தலிலிருந்து நாட்டை காக்க வேண்டுமாயின் ஜனவரி 8ஆம் திகதி ஒன்றிணைந்த 62 இலட்சம் பேரும் தொடர்ந்தும் சேர்ந்திருக்க வேண்டும். ஓன்றிணைந்து அந்த அச்சுறுத்தலுக்கு முடிவுகட்ட வேண்டும்.

மஹிந்த சிந்தனை என்ற அச்சுறுத்தலையும், மோசடிகாரரை மீண்டும் ஆட்சிபீடத்தில் அமர்த்துவதற்கான முயற்சி என்பவற்றை தோற்கடிப்பதற்கு நாம் அணிதிரள வேண்டும். எதிர்வரும் 2020ஆம் ஆண்டில் நடைபெறும் தேர்தலை வெற்றிகொள்ள வேண்டியது அவசியம்.

இந்த நாட்டை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 20 வருடங்களாக ஆட்சிசெய்தது. இந்த ஆட்சிகாலத்தின் இறுதி 10 வருடங்கள் மிகவும் கேடான காலமாக அமைந்திருந்தது. மீண்டும் அந்த கேடுநிறைந்த காலம் உருவாவதை தடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி 2020ஆம் ஆண்டில் ஆட்சியைக் கைப்பற்றி நாட்டை வழிநடத்த வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.