அரசாங்கத்துக்கு 6 முக்கியமா? 2 முக்கியமா? பொறுத்திருந்து பார்ப்போம்- பழனி
நல்லாட்சி அரசாங்கத்துக்கு 6 முக்கியமா? 2 முக்கியமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என தமிழ் முற்பொக்குக் கூட்டணியின் உறுப்பினரும் மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்துடன் கூட்டுச் சேரப் போவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சூழ்ச்சி செய்த இவர்களை அரசாங்கத்துடன் சேர்த்துக் கொள்வதற்கு தங்களது பகிரங்க எதிர்ப்பை அரசாங்கத்துக்கு அறிவித்துக் கொள்கின்றோம்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தாம் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக கூட்டம் கூட்டி ஆதரவாளர்களைத் திரட்டிய போது, எமது ஆதரவாளர்களுக்கு கூட்டத்துக்கு வர முடியாமல் பாதையை மறைத்து சங்கீதக் கச்சேரியை நடாத்தியவரைத் தான் தற்பொழுது அரசாங்கம் சேர்த்துக் கொள்ளப் போகின்றது.
இந்த செய்தி ஊடகங்களில் மாத்திரமே தற்பொழுது பேசப்படுகின்றது. உத்தியோகபுர்வமாக இன்னும் உண்மை நிலவரம் தெரியாது.
இது தொடர்பில் அரசாங்கத்துக்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.  எமது எதிர்ப்பையும் தாண்டி அரசாங்கம் அவர்களை இணைத்துக் கொள்ள தீர்மானித்தால், நாம் யார் என்பதை அரசாங்கத்துக்கு காட்டுவோம் எனவும் தோட்ட மக்களிடையே நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேலும் குறிப்பிட்டார்.








