பொறுப்புக்கூறல் பொறிமுறையை அரசாங்கம் தாமதிக்கிறது: சிவில் சமூக அமைப்புக்கள்
ஸ்ரீலங்கா அரசாங்கம் நிலைமாற்றுக்கால நீதி தொடர்பில் தவறான அணுகுமுறையைப் பின்பற்றுவதாகவும் பொறுப்புக்கூறலிற்கான பொறிமுறையை தாமதிக்கின்றது எனவும் சிவில் சமூக பிரதிநிதிகள் குற்றம்சுமத்தியுள்ளனர்.
ஸ்ரீலங்காவிலுள்ள சிவில் சமூக பிரதிநிதிகள் 70 பேர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையொன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 17 மாதங்கள் கடந்துள்ளன. ஆனாலும் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் கலாச்சாரம் முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை.
இதில் எந்த முன்னேற்றமும் காணப்படாமை குறித்த தமது ஆழ்ந்த கரிசனையை வெளிப்படத்துவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் கலாச்சாரம் காரணமாக ஸ்ரீலங்காவில் மீண்டும் மீண்டும் வன்முறைகள் இடம்பெறுகின்றன.
இந்த கலாச்சாரத்திற்கு முடிவு காணப்படாமல் நிலைமாறகால மற்றும் நல்லிணக்க பொறிமுறைகள் வெற்றியளிப்பது கடினம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. பெரும்பாலோனார் காணமல்போயுள்ளமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் அதற்கு சுயாதீனமான – நம்பத்தன்மை மிக்க அமைப்பு அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








