Breaking News

இனப்படுகொலை குற்றச்சாட்டுக்களை விசாரிக்கத் தயார் : ஜெனீவாவில் மங்கள



ஸ்ரீலங்காவில் தமிழர் மீதான இனப்படுகொலை குறித்த குற்றச்சாட்டுக்களை தமது அரசாங்கம் விசாரிக்கத் தயார் என ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று ஜெனீவா ஐ.நா மனித உரிமை பேரவையில் தெரிவித்திருக்கிறார்.

ஜெனீவாவில் தமிழ் புலம்பெயர் அமைப்பின் பிரதிநிதிகள், ஸ்ரீலங்கா மற்றும் சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மத்தியில் நேற்று மாலை உரையாற்றிய ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர், அண்மையில் கொத்துக் குண்டுகள் தொடர்பில் வெளியான குற்றச்சாட்டுக்கள் மிகவும் பாரதூரமானவை என்றும் அவை குறித்து விசாரணை செய்யத் தயார் எனவும் உறுதியளித்திருக்கிறார்.

மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரின் இறுதி நாளான நாளை ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் ஸ்ரீலங்காவின் முன்னேற்றம் குறித்து ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகர் செய்த் ராத் அல் ஹுசைன் வாய்மூல அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளார்.


இந்த நிலையில் இன்று மாலை ஜெனீவாவில் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் பக்க நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ஸ்ரீலங்காவின் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச மற்றும் அரசின் நல்லிணக்கப் பொறிமுறைகளை ஒருங்கிணைக்கும் செயலகத்தின் செயலாளர் நாயகம் மனோ தித்தவெல போன்றோரும் கலந்துகொண்டிருந்தனர்.


இங்கு உரையாற்றிய அமைச்சர் மங்கள சமரவீர பொறுப்புக் கூறும் நீதி விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளின் தலையீடு குறித்து ஜனாதிபதியும், பிரதமரும் வெளியிட்டுவரும் கருத்துக்கள் இறுதியானவை அல்ல என்றும் இது குறித்த வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.