Breaking News

இராணுவத்தின் பண்ணைக்காக 524 ஏக்கர் காணிகள் முல்லைதீவில் அபகரிக்க முயற்சி

முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தின் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் பண்ணை அமைப்பதற்காக 524 ஏக்கர் அரச காணியை வழங்குமாறு கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.


இந்த கோரிக்கை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினரால் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திடம் விடுக்கப்பட்டுள்ளது.

யுத்தத்திற்குப் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் நிலங்களும் அதேநேரம் அரசகாணிகளையும் இராணுவத்தினர் சுவிகரித்துள்ளனர்.

இந்நிலையில் இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் பண்ணை அமைப்பதற்காக, பிரதேச செயலகங்கள் ஊடாக விடுக்கப்பட்ட கோரிக்கைகள் தற்போது பரிசீலனைக்காக மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பிரதேச மட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுவில் அனுமதி பெறப்பட வேண்டிய காணிகளின் விபரம் எனும் தலைப்பில் பாதுகாப்பு படைகளுக்கான பாரதீனப்படுத்துவதற்காக வழங்கப்படவுள்ள காணிகளின் விபரம் எனக் குறிப்பிட்டு பதின்மூன்று இடங்களில் காணிகளை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய முல்லைத்தீவு சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் பண்ணை அமைப்பதற்காக விஸ்வமடு கிழக்கில் 65 ஏக்கர் அரச காணியும், விஸ்வமடு மேற்கில் 25 ஏக்கர் அரச காணியும், வேணாவில் 215 ஏக்கர் அரச காணியும், புதுக்குடியிருப்பு மேற்கில் 15 ஏக்கர் அரச காணியும், உடயார் கட்டுவடக்கில் 9 ஏக்கர் அரச காணியும், சுதந்திரபுரத்தில் 8 ஏக்கர் அரச காணியும்,

உடையார் கட்டு தெற்கில் 75 ஏக்கர் அரச காணியும்,  உடையார் கட்டு தெற்கில் 10 ஏக்கர் அரச காணியும், தேவிபுரத்தில் 100 ஏக்கர் அரச காணியும், தேராவிலில் 5 ஏக்கர் அரச காணியும், வள்ளிபுனத்தில்  2 ஏக்கர் அரச காணியும் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உடையார் கட்டு வடக்கில் 2 ஏக்கர் அரசகாணியும், உடையார் கட்டு தெற்கில்  ஒன்றே கால் ஏக்கர் அரச காணியும் கல்வி நிலையம் அமைப்பதற்காக கோரப்பட்டுள்ளது.