மத்திய வங்கி உயரதிகாரிகளுடன் ஜனாதிபதி,பிரதமர் பேச்சுவார்த்தை
மத்திய வங்கியின் புதிய ஆளுனர் இன்று (புதன்கிழமை) அறிவிக்கப்படவுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மத்திய வங்கிக்கு சென்று, அங்குள்ள உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன மகேந்திரனின் பதவிக் காலம் நாளையுடன் நிறைவடையவுள்ளது. பிணை முறி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள அர்ஜூன அப்பதவியில் நீடிக்கக் கூடாது என ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தான் குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் வரை தனது பதவிக்காலத்தை நீடிக்க வேண்டாம் என அர்ஜூன மகேந்திரனும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதற்கமைய புதிய ஆளுநராக எரான் விக்ரமரத்ன நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும், அதனை அவர் மறுத்திருந்தார். இந்நிலையில், மத்திய வங்கியின் புதிய ஆளுநராக, மத்திய வங்கியின் பிரதி ஆளுனரான கலாநிதி நந்தலால் வீரசிங்ஹ நியமிக்கப்படலாம் என்று உத்தியோகப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.