கயநாயக்க ஆணைக்குழுவின் கருத்துக்கு கூட்டமைப்பு மௌனம் - சுரேஸ்
கயநாயக்க ஆணைக்குழுவில், தமிழ் மக்கள் தேசிய இனம் என்ற வார்த்தைப் பிரயோகமே இல்லை எனவும் சிறுபான்மை இனம் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழ் மக்கள் தேசிய இனம் அல்ல, சிறுபான்மை இனம் எனவும் அந்த இனம் தாங்கள் கொடுக்கின்றவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தோற்றப்பாட்டுடன், கயநாயக்க ஆணைக்குழுவின் அறிக்கை உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ் மக்கள், சிங்கள மக்களுக்கு முன்னரே இந்த நாட்டில் வாழ்ந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், சிங்கள ஆசிரியர்கள் கூட அதனை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர்கள் வடக்கு கிழக்கை தங்களது தாயகம் என இன்று வரை பூர்வீகமாக வாழ்ந்து வருகின்றார்கள்.
அந்த அடிப்படையில் அவர்களது சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு, அவர்களுக்கான சுயாட்சி வழங்கப்பட வேண்டும் என்பதுதான் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது. கயநாயக்க அறிக்கையில் வடக்கு, கிழக்கு இணைப்பு என்பதை முற்றாக தவிர்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய தலைமை கயநாயக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் எந்தவிதமான கருத்துக்களையும் முன்வைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிங்கள மக்களின் விருப்பங்களை திருப்திப்படுத்தக்கூடிய முன்னொழிவுகளாக இந்த அறிக்கை உள்ளதாகவும் தமிழ் மக்களுடைய தேசிய இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஆணைக்குழு அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாகவும் இந்தக் குழுவில் இருவர் இணைக்கப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயம் என்றும் தெரிவித்தார்.








