Breaking News

பொருளாதார மையத்தை அமைக்காதீர்கள் :விவசாய கல்லூரி மாணவர்கள் கோரிக்கை



வவுனியா விவசாய கல்லூரிக்கு முன்பாக பொருளாதார மையத்தினை அமைக்கவேண்டாமென, வவுனியா விவசாய கல்லூரி மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

கல்லூரியின் கற்பித்தல் நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படும் அதே சந்தர்ப்பத்தில், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுமென தெரிவித்து, இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக வவுனியா விவசாய கல்லூரி மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

‘கடந்த கால யுத்தத்தின் பின்னர் வடபகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும், விவசாய உற்பத்திப் பொருட்களின் சந்தை வாய்ப்பை ஏற்படுத்துவதும் சமகால தேவையாகவுள்ளது.

கடந்த காலங்களில், விவசாய உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் பின்னடைவை எதிர்நோக்கிய நிலை காணப்படுகின்றது. இந் நிலையில் ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படவிருக்கும் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கும் திட்டமானது, அனைவராலும் வரவேற்கத்தக்க விடயமாகும்.

அதே சந்தர்ப்பத்தில், அதிகளவான விவசாய மாணவர்களை உருவாக்குகின்ற வட மாகாணத்தில் அமைந்துள்ள ஒரேயொரு கல்லூரியாக, வவுனியா விவசாய கல்லூரி காணப்படுகின்றது. இக் கல்லூரி பல தசாப்தங்களாக சிறந்த மாணவர்களை உருவாக்கி வருகின்றது. தற்போது சுமார் 100 மாணவர்களைக் கொண்டு இயங்கி வரும் இக் கல்லூரிக்கு அண்மையில், இப்பொருளாதார மத்திய நிலையம் அமையப்பெற்றால், மாணவர்களின் கற்றல், கற்பித்தல் மற்றும் பயிற்சி ஆய்வு நடவடிக்கைகளின் போதான இடையூறுகளையும் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.

ஆகவே, விவசாய திணைக்களத்தின் கீழ் இயங்கிவரும் விவசாய பாடசாலை, அரச விதை உற்பத்திப் பண்ணை மற்றும் விவசாய ஆராய்ச்சி நிலையம் ஆகியன அமைந்துள்ள இடத்தை தவிர்த்து, மாற்று இடத்தை தெரிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இது தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் கவனமெடுக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.