வரி விதிப்பிற்கு எதிராக போராட மக்கள் விடுதலை முன்னணி யாழில் அழைப்பு
மக்கள் மீது சுமத்தப்படும் அசாதாரண வரிச் சுமைக்கு எதிராகப் போராடுவோம்! எனும் தொனிப்பொருளில், மக்கள் விடுதலை முன்னணி யினரால் இன்று (வெள்ளிக்கிழமை) காலை யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
இதில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்டதுடன், அவர் மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து பலருக்கும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார்.
குறித்த துண்டுப் பிரசுரத்தில் வற் வரியின் சுமை, நாட்டைக் கடனாளியாக்கியிருப்பது மக்களா? மற்றும் அரசாங்கத்தின் வயிற்றுப் பிழைப்பு ஆகிய தலைப்புக்களின்கீழ் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளதுடன், மோசடி வரி மக்களுக்கு வேண்டாம்!, மோசடிக்காரர்களிடம் இருந்து பணத்தை அறவிடு!, வயிற்றுப் பிழைப்புக்காக அறவிடும் வரியை உடனடியாக இரத்து செய்!, அரசாங்கத்தின் வீண் விரய செலவுகளை நிறுத்து! மற்றும் மக்கள் மீது சுமத்தப்படும் வரியை உடனடியாக நீக்கு! முதலிய வாசகங்கள் குறித்த துண்டுப் பிரசுரத்தின் பிற்பகுதியில் இடம்பெற்றுள்ளன.








