Breaking News

யாழ். தாக்கதல் குறித்து ஆராயவுள்ள பல்கலைகழக மானியங்கள் குழு



யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு பிரதிநிதிகள் இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி. சில்வா தலைமையிலான ஆறு ஆணையாளர்களை கொண்ட குழுவினரேஇவ்வாறு யாழ்.பல்கலைக்கழகத்திற்கு செல்லவுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வின் போது தமிழ், சிங்கள மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு கைக்கலப்பாகியது. இச்சம்பவத்தில் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் சிலர் சிகிச்சையின் பின் வீடு திரும்பியிருந்தனர். அதில் ஒரு சிங்கள மாணவன் தொடர்ந்தும் கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து இருவாரங்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக யாழ்.பல்கலைக்கழகத்தினால் மூவர் அடங்கிய விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று யாழ். செல்லும் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினருடன் கலந்துரையாடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.