Breaking News

வலிகாமம் வடக்கில் 273 குடும்பங்களுக்கு காணிகள் பகிர்ந்தளிப்பு

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் 273 குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியிலுள்ள அரச காணிகள் தலா இரண்டு பரப்பு வீதம் இன்று பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.


யாழ். குடாநாட்டின் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பலாலி வடக்கு ஜே.254 கிராம சேவகர் பிரிவிலுள்ள அன்ரனிபுரம் பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகள் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதனால் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.  

பலாலி வடக்கு அன்ரனிபுரத்தைச் சேர்ந்த 144 குடும்பங்களுக்கும், பலாலி வடக்கில் மீள்குடியமர்வுக்குப் பதிவுசெய்த காணியற்ற 129 குடும்பங்களுக்கும் தலா 2 பரப்புக்காணி வீதம் அமைச்சர் டி.எம். சுவாமிநாதனால் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.   

தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பலாலி வடக்கு ஜே. 254 பகுதியிலுள்ள அன்ரனிபுரம், கடந்த டிசம்பர் 29 ஆம் திகதி இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு, தெல்லிப்பளை பிரதேச செயலரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகளில் வீடு கட்டுவதற்கான அடிக்கற்களை மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் இன்று வெள்ளிக்கிழமை நாட்டி வைத்துள்ளார்.   

தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட குடும்பங்களுக்கான 890 புதிய வீடுகளுக்கும், 90 திருத்த வீடுகளுக்குமான அடிக்கற்களை மீள்குடியேற்ற அமைச்சர் நாட்டி வைத்துள்ளார்.   

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியேற்றும் அரசின் செயற்றிட்டங்களுக்கு அமைய பாதுகாப்பு காரணங்களுக்காக இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளில் இதுவரை 701.3 ஏக்கர் காணிகள் அதன் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளன.  

அண்மையில் காங்கேசன்துறையில் இடம்பெற்ற தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இராணுவ கட்டுப்பாட்டில் காணப்பட்ட காணிகளை அவற்றின் உரிமையாளர்களுக்கு மீளக் கையளிக்கும் நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோர் கலந்துகொண்டு சுமார் 201.3 ஏக்கர் காணிகளை அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.