உதயங்கவை கைது செய்ய இன்டபோலின் உதவியை நாடிய எவ்.சி.ஐ.டி.
ஸ்ரீலங்கா விமானப் படைக்காக யுத்த விமானமான மிக் ரக விமானக் கொள்வனவில் ஏற்பட்டுள்ள மோசடி தொடர்பில் ரஷ்யாவிற்கான முன்னாள் துாதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவியை பெறுவதற்கு பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றில் அனுமதி கோரியுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி லங்கா ஜயரட்ணவிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். விமானப்படைக்குச் மிக் ரக விமானங்களை கொள்வனவு செய்ததில் ஏற்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.
இந்த வழக்கு விசாரணைகளுக்காக இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உதயங்க வீரதுங்கவிற்கு நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் 8 ஆம் திகதி அழைப்பு விடுத்திருந்தது.
எனினும் உதயங்க வீரதுங்க நீதிமன்றத்தில் முன்னிலையாகாததை தொடர்ந்து சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்புடன் உதயங்க வீரதுங்கவிடம் விசாரணை மேற்கொள்ள அழைப்பாணை விடுக்குமாறு பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீதவானிடம் கோரிக்கை விடுத்தது.
அத்துடன் மிக் ரக விமான கொள்வனவு தொடர்பான முதல் அறிக்கை காணாமல் போயுள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணை செய்ய ஸ்ரீலங்கா சட்ட பிரிவின் பணிப்பாளரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்க வேண்டும் எனவும் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு வலியுறுத்தியது.
இதனையடுத்து பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் கோரிக்கைகளுக்கான உத்தரவு எதிர்வரும் 18 ஆம் திகதி விடுக்கப்படும் என கோட்டை நீதவான் லங்கா ஜயரட்ண தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மருமகனான உதயங்க வீரதுங்க, ரஷ்யாவிற்கான முன்னாள் துாதுவராக பணியாற்றிய காலப்பகுதியில் உக்ரைன் போராளிகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை அடுத்து அவர் தலைமறைவாகியுள்ளார்.
எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தாய்லாந்து, உகண்டா மற்றும் ஜப்பான் பயணங்களின் போது உதயங்க வீரதுங்க, அவருடன் இணைந்து கொண்டு எடுத்த புகைப்படங்களும் இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








