Breaking News

விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் – அவசரகால உத்தியாகும்



போர் குற்றங்கள் குறித்த விசாரணைப் பொறிமுறையில், சர்வதேச நீதிபதிகள் அல்லது சட்டவாளர்களை உள்ளடக்கிய விசாரணை பொறிமுறைக்கு அரசாங்கம் ஜெனிவாவில் கைச்சா த்திட்டுள்ளமையானது, நெருக்கடியை சமாளித்துக் கொள்வதற்கு கையாண்ட உத்தியே தவிர, அதன் தார்மீக தன்மை என்பது வெறும் சூன்யமானதொன்றென முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள்ளார்.

ஜெனிவா தீர்மானத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கிய விசாரணை குழுவின் சட்டத்தன்மை தொடர்பாக தெளிவுப்படுத்துகையில், அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர், நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் நீதித்துறை அதிகாரத்தை மீறி செயற்படும் அதிகாரம், யாருக்கும் வழங்கப்பட வில்லை என்றும் சுட்டிக்காட்டினார். மக்கள் ஆணையின் பிரகாரம் சட்டவாக்கச்சபைக்கு சட்டங்களை உருவாக்கும் அதிகாரம் காணப்பட்டாலும் அதனை அமுலாக்கும் அதிகாரம் நீதிதுறைக்கே காணப்படுவதாகவும் கூறினார்.

‘கடந்த ஆண்டு ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதற்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணையும் வழங்கியது. இது அனைவரும் அறிந்த விடயமாகும்.

ஆனால் அந்த தீர்மானத்தில் காணப்படுகின்ற பல விடயங்கள் இலங்கையின் சட்டத்தின் பிரகாரம் நடைமுறையில் எந்தளவு சாத்தியப்படும் என்பது ஆராயப்பட வேண்டியதொன்றாகும்’ என்றும் கூறினார்.