Breaking News

சர்வதேச விசாரணை : வெளிப்படையாக கோருவதற்கு தலைமைகள் தயங்குகின்றனவா?



சர்வதேச விசாரணையினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் எதிர்க்கவில்லையென்றும் ஆனால் தலைமைகள் அதனை வெளிப்படையாக தெரிவிப்பதற்கு தயங்குகின்றார்கள் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி. முத்தலிப் பாரூக் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற கிழக்கின் எழுச்சி என்ற கருத்து பரவலாக்கம் குறித்து விளக்கமளிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணை குறித்த கட்சியின் நிலைப்பாடு என்னவென ஊடகவியலாளர்களால் வினவப்பட்டது. இதன்போதே பாரூக் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணாமல் போனோர் மற்றும் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்க வேண்டும். இதுகுறித்து உள்ளூர் விசாரணையா சர்வதேச விசாரணையா அல்லது கலப்பு நீதிமன்ற முறையிலான விசாரணையா என அரசாங்கம் தெளிவாக கூறவில்லை.

ஒவ்வொரு தரப்பினரும் ஒவ்வொரு விதமாக கூறுகின்றார்கள். உண்மைகளை கண்டறிவதாக இருந்தால் சர்வதேச விசாரணை வேண்டும். உள்நாட்டு விசாரணை சமனாகவும் நடுநிலையாகவும் இருக்குமென கூறமுடியாது.

அந்தவகையில் சர்வதேச விசாரணையினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கவில்லை. தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு நீதி கிடைக்க வேண்டுமாயின் அது சர்வதேச விசாரணையால் மட்டுமே முடியும். தலைமைகள் ஒருபோதும் சரியாகவும் தெளிவாகவும் உறுதியாகவும் இதனை சொல்ல மாட்டார்கள். ஆனால் தலைமைக்கு அடுத்தபடியாக இருக்கும் நாங்கள் இதனை தெளிவாக வலியுறுத்துகின்றோம்.

குறிப்பாக சர்வதேச விசாரணை தேவையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்கூட நேரடியாக கூறியிருப்பார் என்று நம்பவில்லை” என்றார்.