தமிழ் மக்களின் நல்லெண்ணத்தை மீளப்பெறுமாறு அரசுக்கு வலியுறுத்தல்!
வடமாகாண மீள்குடியேற்ற செயலணியில் வடக்கு மாகாண முதலமைச்சரை நியமித்து தமிழ் மக்களின் நல்லெண்ணத்தை மீளப்பெறுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எழுதிய கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உங்களது தலைமையின் கீழ் உள்ள ஆட்சியில் புதிய சிங்கள குடியேற்றங்கள் மற்றும் பௌத்த மத ஆக்கிரமிப்பு நடைபெறுவதை தடைசெய்வீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம் எனவும் குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மீள்குடியேற்றம் மிகப்பெருமளவு வடக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டிருப்பதால், வடக்கு மாகாண முதலமைச்சரும் இதில் உள்ளடக்கப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களின் ஏகோபித்த எண்ணம் ஆகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் காரணமாக வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த சிங்கள், முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்காக, மீள்குடியேற்றச் செயலணி நான்கு இணைத்தலைவர்களை கொண்டு அமைக்கப்பட்டது. இந்நிலையில், வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள மீள்குடியேற்ற நடவடிக்கை குறித்து வடக்கு மாகாணசபையுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலான முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.