Breaking News

இராணுவத்தின் பிடியில் பரவிப்பாஞ்சான் காணிகள் : கையளிக்குமாறு மக்கள் கோரிக்கை



இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் காணியை மீள கையளிக்குமாறு, காணி உரிமையாளர்களான பிரதேச மக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த பகுதிக்கு இன்று (திங்கட்கிழமை) காலை சென்ற காணி உரிமையாளர்கள், அங்கு நிலைகொண்டுள்ள இராணுவத்தினரிடம் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளனர். கடந்த திங்கட்கிழமையும் குறித்த பிரதேசத்திற்குச் சென்ற மக்கள் இவ்வாறான ஒரு கோரிக்கையை முன்வைத்ததோடு, இராணுவத்தினரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்து தமக்கு ஒரு வார காலத்திற்குள் தீர்வை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும், இவ் ஒருவார காலப்பகுதியில் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாத நிலையில், மக்கள் இன்று காலை மீண்டும் பரவிப்பாஞ்சான் பகுதிக்குச் சென்று இக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். எனினும், மக்களது கோரிக்கை கடிதத்தை பிரதேச செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்துள்ளதாக இராணுவத்தினர் கூறியுள்ளனர்.

இந்நிலையில், காணி விவகாரத்தில் இராணுவத்தினரும் அதிகாரிகளும் மாறி மாறி ஒருவரை ஒருவர் சாடி வருவதாகவும், தாம் வாடகை வீடுகளிலும் உறவினர்களது வீடுகளிலும் தங்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

காணி உரிமையாளர்களிடம் இதுகுறித்து வினவியபோது, எதிர்வரும் 18ஆம் திகதி கிளிநொச்சிக்கு வருகை தரவுள்ள ஜனாதிபதியிடம் தமது காணியை விடுவிக்குமாறு கோரவுள்ளதாகவும், பொதுமக்கள் காணிகளை விட்டு இராணுவம் வெளியேற்றப்பட்டு தம்மை சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.