Breaking News

இன்று அவசரமாக கூடுகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு



தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பில் நடைபெறவுள்ளது.

வடக்கில் பொருளாதார மையத்தை அமைப்பது தொடர்பாக ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளுக்கு தீர்வு காணும் முகமாக, நாளைய தினம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இந்த அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளது.

கொழும்பில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

வடக்கில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மையத்தை எங்கே அமைப்பது? என்பது தொடர்பில் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த கூட்டம் நடத்தப்படவுள்ளது.

இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கிடையில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை தீர்ப்பது மற்றும் எல்லோரும் ஒருமித்து செயற்படுவது குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.