Breaking News

இந்த ஆண்டு இறுதிக்குள் எட்கா உடன்பாடு – இந்திய,இலங்கை அமைச்சர்கள் இணக்கம்



பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டை (எட்கா) செய்து கொள்வது தொடர்பாக, விரைவாக பேச்சுக்களை நடத்தி, இந்த ஆண்டு இறுதிக்குள், முடிவை எட்டுவதற்கு, இந்தியாவும் சிறிலங்காவும் இணங்கியுள்ளன.

புதுடெல்லி சென்றுள்ள சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவுக்கும், இந்தியாவின் வர்த்தக, தொழிற்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையில், நேற்று நடந்த பேச்சுக்களின் போதே இந்த இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுக்களில், இரண்டு நாடுகளின் அமைச்சர்களும், முன்மொழியப்பட்டுள்ள எட்கா உடன்பாட்டின் முன்னேற்றங்கள் தொடர்பாக மீளாய்வு செய்ததுடன், வேகமாக பேச்சுக்களை நடத்தி, உடன்பாடு குறித்து விரைவாக, முடிவை எடுக்கவும், தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்திய வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள், எட்கா உடன்பாட்டில் கையெழுத்திடுவதென்றும் இந்தப் பேச்சுக்களில் முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுதொடர்பான பேச்சுக்களை நடத்துவதற்காக இந்திய அரசின் உயர்மட்டக் குழுவொன்று விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகள் தொடர்பாகவும், இரண்டு நாடுகளின் அமைச்சர்களுக்கு இடையிலான சந்திப்பின்போது பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்தியா- சிறிலங்கா இடையிலான இருதரப்பு வர்த்தகம், 2015-16ஆம் ஆண்டில், 6 பில்லியன் டொலர்களாக குறைந்திருக்கிறது. இதற்கு முந்திய நிதியாண்டில் இருதரப்பு வர்த்தகம், 7.45 பில்லியன் டொலர்களாக இருந்தது.

இந்தநிலையிலேயே இருதரப்பு வர்த்தகத்தை மேலும் விரிவாக்கும் நோக்கில் எட்கா உடன்பாட்டை செய்து கொள்ளும் முயற்சிகளை இரண்டு நாடுகளின் அரசாங்கங்களும் தீவிரப்படுத்தியுள்ளன.