Breaking News

வடக்கு பொருளாதார மத்திய நிலையம் எங்கே? – ஒரு வாரத்துக்குள் முடிவு



வடக்கு பொருளாதார மத்திய நிலையத்தை எங்கே அமைப்பது என்பது தொடர்பாக ஏற்பட்டுள்ள இழுபறிக்கு ஒரு வாரத்துக்குள் தீர்வு காணப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வடக்கு பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியா மாவட்டத்தில் அமைப்பதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதனை ஓமந்தையில் அமைக்க வேண்டும் என்ற வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தி வருகிறார்.

அதேவேளை, இன்னொரு தரப்பினர் தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

இந்த நிலையில், இந்த பொருளாதார மத்திய நிலையத்தை மதவாச்சிக்கு கொண்டு செல்வதற்கு சிறிலங்கா அமைச்சர் ஹரிசன் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற- மாகாண சபை உறுப்பினர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள இழுபறிநிலைக்கு முடிவு கட்டும் கூட்டம் ஒன்று நேற்று கொழும்பில் இரா. சம்பந்தன் தலைமையில் இடம்பெற்றது.

இதில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் ஓமந்தை மற்றும் தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கு சம ஆதரவு காணப்பட்ட நிலையில், வடமாகாண நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களின் எழுத்துமூலமான கருத்துக்களைப் பெற்ற பின்னர், ஒரு வாரத்துக்குள் இதுபற்றி முடிவு எடுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.