பொருளாதார மத்திய நிலையம்: இரு அணிகளாக கூட்டமைப்பு களத்தில்!
வடமாகாணத்துக்கான பொருளாதார மத்தியநிலையத்தின் அமைவிடம் தொடர்பாக கருத்துக் கணிப்பொன்றை நடத்தி ஒருவார காலத்தினுள் இறுதி முடிவு எடுப்பது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையத்தை எங்கு அமைப்பது என்பது தொடர்பான சர்ச்சைகள் நீடித்து வரும் நிலையில், அது தொடர்பில் முடிவு எடுப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன், சிறிதரன், சிவமோகன், சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, டெலோ அமைப்பின் உறுப்பினர் சுரேந்திரன், மாகாண அமைச்சர்களான டெனிஸ்வரன், குருகுலராஜா, சத்தியலிங்கம் மற்றும் ஐங்கரநேசன் ஆகியோர் கலந்து கொணடிருந்தனர்.
இக்கூட்டத்தில் வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதே பொருத்தமானது என்பதற்கான தனதரப்பு வாதத்தை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் நீண்ட விளக்கத்துடன் முன்வைத்தார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் மாகாண அமைச்சர்களான ஐங்கரநேசன், குருகுலராஜா ஆகியோரும் வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க வேண்டும் என அழுத்தமாக வலியுறுத்தியிருந்தனர்.
அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன், சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, மாகாண அமைச்சர்களான சத்தியலிங்கம், டெனிஸ்வரன் ஆகியோர் தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதனையடுத்து, அனைவரின் கருத்துக்களையும் கேட்டறிந்த இரா.சம்பந்தன் கூட்டத்தில் இருந்தவர்கள் மத்தியில் பொருளாதார மத்திய நிலையத்தின் அமைவிடம் தொடர்பாக கருத்துக்கணிப்பை நடத்தினார். இதன்போது தலா ஐவர் ஓமந்தை மற்றும் தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்க வேண்டுமெனக் கூறியதால் சமநிலை காணப்பட்டது.
இதனிடையில், ரெலோவின் தலைவரும், நாடாளுமன்ற குழுக்களின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனின் நிலைப்பாடங்கிய கடிதம் அவரது கட்சியின் சார்ப்பில் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சுரேந்திரனால் சமர்ப்பிக்கப்பட்டது. அவரும் பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டும் என தனது நிலைப்பாட்டை கடித்தில் வெளிப்படுத்தியிருந்தார்.
அதேவேளை, இக்கூட்டத்pல் பங்கேற்காத நாடாளுமன்ற உறுப்பினரான சார்ள்ஸ் நிர்மலநாதன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோரின் கருத்துக்களும் பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
இதனையடுத்து வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தின் அமைவிடம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரினதும் கருத்துக்களைப் பெற்று பெரும்பான்மையின் அடிப்படையில் முடிவெடுப்போம் என இரா.சம்பந்தன் அறிவித்தார்.
அத்துடன், வடமாகாண முதலமைச்சர் மாகாணசபை உறுப்பினர்களின் நிலைப்பாடங்கிய கடிதத்தை ஒருவார காலத்தினுள் அனுப்பி வைக்கவேண்டும் என கேட்டுக்கொண்ட இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்தனியாக தமது கருத்துக்களை எழுத்து மூலமாக சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவித்தார்.








